Published : 19 Jul 2022 04:45 AM
Last Updated : 19 Jul 2022 04:45 AM
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த 50 ஆண்டு காலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ என்று அனைவரும் வியந்து பார்க்கும் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ‘தமிழ்நாடு திருநாள்’ விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவுக்குத் தலைமை தாங்கினார். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்புரையாற்றினார். ‘தமிழ்நாடு நாள்’ சிறப்பு மலரை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டுக்கான ‘இலக்கிய மாமணி’ விருதை கு.சின்னப்ப பாரதி சார்பில் அவரது குடும்பத்தினருக்கும், கோணங்கி மற்றும் இரா.கலியபெருமாள் ஆகியோருக்கும், ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.விருதை கயல் (கோ) தினகரனுக்கும், ‘கபிலர்’ விருதை பாவலர் கருமலைத் தமிழாழன் (எ) கி.நரேந்திரனுக்கும், ‘உ.வே.சா.’விருதை மருத்துவர் இரா.கலைக்கோவனுக்கும், ‘அம்மா இலக்கிய விருதை’ முனைவர் மு.சர்குணவதிக்கும், ‘காரைக்கால் அம்மையார்’ விருதை முனைவர் இரா.திலகவதி சண்முகசுந்தரத்துக்கும் வழங்கினார்.
மேலும், ‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்றனர்.
‘தமிழ்நாடு நாள்’ விழாவில், முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஜூலை 18 என்ற மதிப்புமிக்க நாளில் இத்தகைய சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அரசுத் துறைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று (நேற்று) காலையில்தான் இல்லம் திரும்பினேன். மருத்துவர்களின் ஆலோசனைப் படி ஓய்வெடுத்து வருகிறேன்.
உள்ளத்தில் மகிழ்ச்சி
தமிழ்நாடு திருநாளை தள்ளிவைக்க இயலாது என்பதால், காணொலி மூலமாகவாவது பேசிவிடுவது என்று நான் முடிவெடுத்தேன். ‘தமிழ்நாடு வாழ்க’ என்று அண்ணா, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள், தமிழக சட்டப்பேரவையில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒருமுறை முழங்குவதன் மூலமாக, என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.
திமுக ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. திமுக என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தாலோ, தமிழகத்தில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமல் போயிருந்தாலோ இந்த மாநிலத்துக்கு இன்று வரையில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்படாமலே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் போல இதுவும், ‘சென்னைப் பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்றுவரை இருந்திருக்கும். ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தி வருகிறோம். ‘வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது’ என்று ஒரு காலத்தில் முழங்கினோம். அன்று அத்தகைய நிலைமை இருந்தது.
1967-ம் ஆண்டுக்குப்பின் திமுக ஆட்சி மலர்ந்த பிறகு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதற்குப் பிறகு, கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ என்று அனைவரும் வியந்து பார்க்கும் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
‘தமிழ்நாடு நாள்’ நிகழ்வையொட்டி, கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறையின் தொல்பொருள் கண்காட்சி, தமிழ்நாடு நிலஅளவைத் துறையின் சிறப்பு வரைபடக் கண்காட்சி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம் ஆகியவை நாளை வரை (ஜூலை 20) காட்சிப்படுத்தப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT