Published : 19 Jul 2022 04:55 AM
Last Updated : 19 Jul 2022 04:55 AM
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 4 மணியளவில் விநாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 403 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, நேற்று 2-வது நாளாக அணையின் 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி, நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கனஅடி என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அழகைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆற்றங்கரையோரம் குவிந்து வருகின்றனர்.
தீயணைப்பு படைக்கு பாராட்டு
இதற்கிடையே கடந்த 16-ம் தேதி மேட்டூர் காவிரி ஆற்றில் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேர் கரைக்கு வரமுடியாமல் தவித்தனர். இதையறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் துணிச்சலாக செயல்பட்டு, வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த மூவரையும் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புப்படை வீரர்களுக்கு கேடயம் வழங்கி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 28 ஆயிரம் கன அடியும், அப்பர் அணைகட்டு என்கிற முக்கொம்பில் இருந்து விநாடிக்கு 72 ஆயிரம் கன அடியும் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் நேற்று நள்ளிரவு (ஜூலை 19) கொள்ளிடம் கீழணைக்கு வந்து சேர்ந்தது. கீழணையில் 9 அடி தண்ணீரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் விநாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது
ஒகேனக்கல் காவிரியாற்றில் 3 நாட்களுக்குப் பின்னர் நேற்று நீர்வரத்து சற்று குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 14-ம் தேதி விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 15-ம் தேதி காலையில் விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து, அன்று பகலில் விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 1.10 லட்சம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT