Published : 19 Jul 2022 03:56 AM
Last Updated : 19 Jul 2022 03:56 AM
சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பள்ளி மீதான கலவரம் திட்டமிட்டு நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த 16 வயதான மாணவி, பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கலவரமாக வெடித்தது.
இதற்கிடையில், மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிசிஐடி விசாரணை கோரியும், தங்கள் தரப்பு மருத்துவரையும் இடம்பெறச் செய்து, மறுபிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரியும் மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு: மர்மமான முறையில் இறந்த மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
நீதிபதி: மறுபிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டு, வன்முறையில் ஈடுபட்டது ஏன்? ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால், நீதிமன்றங்கள் எதற்கு? நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அமைதிப் பூங்கா என்று பெயர் எடுத்த தமிழகத்தில் இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன?
மனுதாரர் தரப்பு: வன்முறை சம்பவங்களுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வாட்ஸ்-அப் குழு அமைத்து திரண்டு வந்து, போராட்டம் நடத்தியுள்ளனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதி: போராட்டம் வன்முறையாக மாறும் வரை அதை ஏன் போலீஸாரால் முன்கூட்டியே கணித்து, தடுக்க முடியவில்லை?
அரசுத் தரப்பு: போலீஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். அமைதியான முறையில் போராடியவர்கள் திடீரென வன்முறையில் இறங்கியுள்ளனர். மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்வதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், மனுதாரர் தரப்பு மருத்துவர்களை வைத்துதான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு வாதம் நடந்தது.
தொடர்ந்து நீதிபதி கூறும்போது, “போராட்டத்தில் கருப்பு சட்டை அணிந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் யார்? இந்த வன்முறையை, ஒரு கும்பலால் அரங்கேற்றப்பட்ட ஒருங்கிணைந்த குற்றச் செயலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. 4,500 மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. வன்முறையாளர்கள் மீது போலீஸ் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை ஒன்றுதிரட்டிய வாட்ஸ்அப் குழு அட்மின் மீதும், நீதிமன்றத்துக்கு இணையாக விவாதம் நடத்திய யூ-டியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய, தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குநர் சாந்தகுமாரி தலைமையில், விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுலநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்கிறேன். மனுதாரர் தரப்பில் அவரது வழக்கறிஞர் கேசவன் இக்குழுவில் இடம்பெறலாம்.
எதிர்காலத்தில் கல்வி வளாகங்களில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களை சிபிசிஐடி போலீஸார் மட்டுமே விசாரிக்க வேண்டும்.
மாணவி இறப்பதற்கு முன்பு யார் யாருடன் பேசியுள்ளார், அவரது மரணத்துக்கான காரணத்தையும் போலீஸார் துப்பு துலக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு, நேர்மையுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி மரணம் தொடர்பாக ஊடகங்களில் விவாதம் எதுவும் நடத்தக் கூடாது. மாணவியின் பெற்றோரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது.
மறுபிரேதப் பரிசோதனை நடந்த பிறகு, அமைதியான முறையில் இறுதி ஊர்வலம் நடைபெற வேண்டும். மறுபிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும், மறுபிரேதப் பரிசோதனையில், தங்கள் தரப்பு மருத்துவரும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தனி நீதிபதி நிராகரித்துவிட்டதாக, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வில் மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு முறையீடு செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “குற்றவியல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தைதான் நாட வேண்டும்” என்று கூறினர்.
மேலும், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், அதுவரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பாக விசாரணை அமைப்பை நாடி கோரிக்கையை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய நீதிபதி, மருத்துவக் குழு அமைத்து மறுபிரேதப் பரிசோதனை நடத்தும் உத்தரவை நிறுத்திவைக்க முடியாது என்று கூறி, அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT