Published : 04 May 2016 12:30 PM
Last Updated : 04 May 2016 12:30 PM
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மேலும் இலவச திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இலவசங்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அம்மாசியை ஆதரித்து, ஓமலூர் பேருந்து நிலையத்தில் அவர் பேசியதாவது:
அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் சாலைவசதி, பள்ளிக்கட்டிடம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வீடுகளில் இல்லை. அவையெல்லாம் காயலான் கடைகளில் உள்ளன. மக்களின் வரிப்பணத்தின் மூலம் வழங்கப்பட்ட பொருள்களால் யாருக்கும் பயனில்லை. இலவச பொருட்களை வழங்கிவிட்டு, பால், பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மேலும் இலவச திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இலவசங்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம்.
திமுக தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு பயனில்லாத இலவச திட்டங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைப்பு, விவசாயக் கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய 501 அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
ஓமலூர் ஒன்றியம் பொட்டனேரி ஏரியை, மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு நிரப்பி, மேலும் 20 ஏரிகள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காடையாம்பட்டி தாலுகாவில் புதிய பேருந்து நிலையம், வாசனை திரவிய தொழிற்சாலை, பெரமச்சூர், தொளசம்பட்டி உள்ளிட்ட இடங்களில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT