Last Updated : 18 Jul, 2022 06:23 PM

 

Published : 18 Jul 2022 06:23 PM
Last Updated : 18 Jul 2022 06:23 PM

குடியரசுத் தலைவர் தேர்தல் | எமகண்டம், ‘செல்லாத வாக்கு’... இது புதுச்சேரி வாக்குப்பதிவு சுவாரஸ்யம்

இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாக்களித்தார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, முதல்வர், எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். நாளை அதிகாலை டெல்லிக்கு வாக்குப்பெட்டி எடுத்துசெல்லப்படுகிறது. எமகண்டம் நேரம் பார்த்தது, செல்லாத வாக்கை அளித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கூறியது என சில சுவாரஸ்யங்கள் அரங்கேறின.

நாடு முழுவதும் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை வளாகங்களில் எம்எல்ஏக்கள் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் வாக்களிக்காத எம்பிக்கள் அனுமதி பெற்று அந்தந்த மாநிலங்களில் வாக்களித்தனர்.

புதுவையில் சட்டப்பேரவை வளாகத்தின் 4-வது மாடியில் உள்ள கமிட்டி அறையில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, பிரத்யேக பேனா உள்ளிட்ட சாதனங்கள் தேர்தல் துறை மூலம் புதுவைக்கு வந்தது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குடியரசுத்தலைவர் தேர்தலையொட்டி கடந்த சனிக்கிழமை முதல் சட்டப்பேரவை மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி குமார், துணை தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் வாக்குப்பதிவு பணியை தொடங்கினர்.

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் வாக்களிக்கலாம். புதுவை பாஜக ராஜ்யசபா எம்பி செல்வகணபதி டெல்லியில் நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு செய்தார். மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் வாக்கு மதிப்பு 700, புதுவை எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு 16 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 30 எம்எல்ஏக்களுக்கு 480, 2 எம்பிக்களுக்கு ஆயிரத்து 400 என ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 880 வாக்குகள் புதுவையில் உள்ளது.

காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் என்பதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பகல் 11.50 மணியளவில் எதிர்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத், எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்து சிறிது நேரம் கைகடிகாரத்தை பார்த்து காத்திருந்தனர்.

பகல் 12 மணியளவில் திமுக எம்எல்ஏ நாஜிம் வாக்களித்தார். அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்பி வைத்திலிங்கம் மற்றும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். எமகண்டத்துக்கு பிறகு வாக்களித்தீர்களா என்று கேட்டதற்கு எம்பி வைத்திலிங்கம் கூறுகையில், "எமகண்டத்தின் போதுதான் கிளம்பினோம். காரைக்கால் எம்எல்ஏக்கள் வர தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகுதான் வாக்களித்தோம்" என்று குறிப்பிட்டார். திமுக எம்எல்ஏ நாஜிமோ, "பகல் 12 மணிக்குள்ளேயே நான் வாக்களித்தேன்" என்றார்.

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்து வந்த பிறகுதான் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், இக்கட்சிகளின் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்து சிறிது நேரத்துக்கு பிறகு வாக்களித்தனர்.

செல்லாத வாக்கு: இதில் இறுதியாக வாக்களித்த சுயேட்சை எம்எல்ஏவான நேரு கூறுகையில், "நான் முதல்வர் ரங்கசாமிக்குதான் ஆதரவு தருகிறேன். அவர் ஆதரிக்கும் பாஜக கூட்டணியையோ, எதிர்க்கட்சிகளையோ அவர்களின் வேட்பாளர்களையோ ஆதரிக்கவில்லை. அதனால் வாக்குப்பெட்டியில் எனது வாக்கை செல்லாத வாக்காகதான் செலுத்தினேன்" என்று குறிப்பிட்டார்.

மதியமே அனைவரும் வாக்களித்தாலும், மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு மையம் திறந்திருந்தது. மாலை 5 மணிக்கு மேல் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அதையடுத்து நாளை அதிகாலை 1.30 மணிக்கு வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் சென்னை எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x