Published : 18 Jul 2022 03:31 PM
Last Updated : 18 Jul 2022 03:31 PM

தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கின: மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர்.

கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 18) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பள்ளிகள் அறிவித்தன.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவர் கே.ஆர்.நந்தக்குமார் வெளியிட்ட அறிக்கையில் "பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நிவாரணம் வழங்குதல், குற்றவாளிகளை தண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்படும். தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமுக முடிவு காண முன்வரவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதன்படி மெட்ரிக் பள்ளிகள் 89 சதவீதம், நர்சரி மற்றும் ப்ரைமரி பள்ளிகள் 95 சதவீதம், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கின. குறைந்தபட்சமாக தருமபுரியில் 16 சதவீதம், நாமக்கலில் 32 சதவீத பள்ளிகள் மட்டுமே இயங்கின. கள்ளக்குறிச்சியில் 92 சதவீத பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x