Published : 18 Jul 2022 03:05 PM
Last Updated : 18 Jul 2022 03:05 PM

“முதல் 3 நாட்களில் அரசு மெத்தனம் காட்டியதே சின்னசேலம் வன்முறைக்கு காரணம்” - இபிஎஸ்

சென்னை: "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 3 நாட்களாக அரசு மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியமாக இருந்ததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கள்ளக்குறிச்சி சம்பவம் 13-ம் தேதியே நடந்துவிட்டது. 17-ம் தேதியன்றுதான் வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. அரசின் மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியத்தின் காரணமாக இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது.

13-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரை மாணவியின் பெற்றோர், தொலைக்காட்சி வாயிலாக பேட்டி அளித்து வந்துள்ளனர். கொந்தளிப்பான, பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது. உளவுத் துறை மூலம் தமிழக அரசு தகவல் சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், வன்முறையை தவிர்த்திருக்கலாம்.

உளவுத்துறை செயலற்றுள்ளதால், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம். அதனால், இந்த அரசை செயலற்ற அரசாங்கம் என்று கூறுகிறேன்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம்: 30 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்தது. பிரதான எதிர்க்கட்சி, எங்கள் கட்சி அலுவலகத்தில் சமூக விரோதிகள், அத்துமீறி நுழைவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டை காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையரிடமும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர் புகார் மனு அளித்துவிட்டு ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தனர்.

இத்தனைக்கு பின்னரும் பாதுகாப்பு அளிக்காத ஒரே அரசாங்கம் இந்த அரசாங்கம்தான். ரவுடிகளுக்கும் குண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து எங்கள் கட்சி அலுவலகத்தில் நுழையவிட்டு வேடிக்கைப் பார்த்த அரசாங்கம்தான் இந்த அரசு. எனவே இப்படிப்பட்ட அரசாங்கத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் பார்க்க முடியும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x