Published : 18 Jul 2022 12:41 PM
Last Updated : 18 Jul 2022 12:41 PM
விருதுநகர்: சென்னை மாகானம் என்றிருந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டக்கோரியும், தமிழை ஆட்சி மொழியாக்கோரியும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரை இன்று நினைவுகூர்வது பொருத்தமானது.
விருதுநகர் அருகேயுள்ள மண்மலைமேடு (சூலக்கரை மேடு) கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதிக்கு கடந்த 26.1.1895ல் மகனாப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். சிறுவயதிருந்தே தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் மிக்கவராக இருந்தவர். இளைய வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து 1933ல் தீண்டாமை ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார். 1937ல் கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றார்.
தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட சங்கரலிங்கனார், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக கடந்த 27.7.1957ல் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி சங்கரலிங்கனார் பின்னர், விருதுநகர் தேசபந்து மைதானத்தில்தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மதுரையிலுள்ள அரசு மருத்துவமனையில் தியாகி சங்கரலிங்கனார் சேர்க்கப்பட்டார். ஆனால், தனது கொள்கைக்காக அப்போதும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடவில்லை.
தமிழுக்காகவும் தமிழ்மேல் கொண்ட தனது கொள்கைக்காகவும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 76வது நாளான 1957 அக்டோபரில் தியாகி சுந்தரலிங்கனார் உயிர்துறந்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின.
அதையடுத்து, சென்னை மாகானம் என்பதை "தமிழ்நாடு" என அறிவித்து இதற்கான அறிவிப்பை 24.2.1961ல் தமிழக சட்டசபையில் அப்போதைய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.
தமிழுக்காக உயர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் ரூ.1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தார். தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் இன்று அதற்காக உயிர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் போற்றுதலுக்கு உரியவரே. தியாகி சங்கரலிங்கனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT