Published : 18 Jul 2022 11:56 AM
Last Updated : 18 Jul 2022 11:56 AM
சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுதிய 1,42,286 மாணவ, மாணவியருக்கு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை உதவி மையத்தின் மூலம் மனநல ஆலோசகர்களை கொண்டு கவுன்சிலிங் வழங்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கன் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," 17.07.2022 அன்று நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 மாணவர்கள் தேர்வு எழுதினர். இது கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையான 1,10,971-ஐ விட கூடுதலாக உள்ளது.
2020 ஆம் ஆண்டில் 1,17,000 மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய 12-ஆம் வகுப்பு தேர்வினை முடித்து இந்த நீட் தேர்விற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு படித்து, தேர்வினை எழுதியிருக்கிறார்கள்.
இதில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில், நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்“ சார்பாக மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு, தேர்வு எழுதிய 17,567 மாணவர்களின் பட்டியல் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டது.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் இரண்டு மற்றும் அதற்கு மேல் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள், மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் அரசால் வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீட்டில் கடந்த வருடம் 445 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிற்கும், 110 பிடிஎஸ் மருத்துவப் படிப்பிற்கும் ஆக மொத்தம் 555 மாணவர்கள் பயனடைந்தார்கள்.
எனவே இவ்வாண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கிவருகிறது. மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து பெறுவதற்கு 104 என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டணமில்லா இலவச எண்ணை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளலாம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT