Published : 18 Jul 2022 11:37 AM
Last Updated : 18 Jul 2022 11:37 AM
சென்னை: புதிய மணல் குவாரிகள்; தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை சரி செய்ய முடியாத சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்தி விடும்.
தமிழகத்தில் தற்போது 25-க்கும் கூடுதலான மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு அதிகாரபூர்வமாக 13 ஆயிரம் சரக்குந்து லோடு ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இவை தவிர்த்து எந்தக் கணக்கிலும் வராமல் பெருமளவில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
ஆனால், இவை போதுமானவையாக இல்லை என்று கூறி கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கெனவே மாட்டு வண்டிகளில் மட்டும் மனித சக்தியைக் கொண்டு மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட 30 மணல் குவாரிகளில் எந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளவும் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நீர்வளத்துறை கடந்த 6 மாதங்களில் விண்ணப்பம் செய்துள்ளது.
தமிழக அரசு நீர்வளத்துறையின் இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது. எடுத்துக்காட்டாக அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் வெள்ளாற்றில் 8 இடங்களில் எந்திரம் மூலம் மணல் அள்ள அரசு திட்டமிட்டிருக்கிறது. செந்துறை வட்டத்தில் வெள்ளாறு மொத்தமே 8 கி.மீக்கும் குறைவான தொலைவு தான் பாய்கிறது.
அந்த தொலைவுக்குள், அதாவது ஒரு கி.மீக்கும் குறைவான தூரத்திற்குள் ஒரு குவாரி அமைக்கப்பட்டால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களிலும், நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஆகிய வட்டங்களில் காவிரி ஆற்றில் 8 இடங்களிலும் எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளக்கூடிய வகையில் குவாரிகளை அமைப்பதும் அதே போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இவை எதையுமே உணராமல் மணலுக்கான தேவை இருக்கிறது என்ற ஒன்றை மட்டும் கூறி, அதற்கான மாற்று ஏற்பாடுகளைப் பற்றி சிந்தித்துக் கூட பார்க்காமல், மணல் குவாரிகளை திறப்பது மட்டும் தான் தீர்வு என்று அரசு செயல்படுவது மக்கள் நலன் சார்ந்தது அல்ல.
2003-ஆம் ஆண்டில் மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட நாளில் இருந்தே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுப்பது அதிகரித்து விட்டது. அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகளைக் களைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கத்திலிருந்தே போராடி வருகிறது.
2003-ஆம் ஆண்டில் மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட போது வகுக்கப்பட்ட விதிகளின்படி, 3 அடி உயரம், 3 அடி அகலத்திற்கு மட்டும் தான் மணல் எடுக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 19 ஆண்டுகளில் எந்த இடத்திலும் இந்த விதி கடைபிடிக்கப்படவில்லை.
2006-11 திமுக ஆட்சியின் போது தாமிரபரணி, பாலாறு ஆகியவற்றில் எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளப்பட்டதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து அந்த ஆறுகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளுவதை முற்றிலுமாக தடை செய்து 30.09.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டிருந்தார்.
அந்த ஆணைக்கு எதிராக இப்போது எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள அதே திமுக அரசு அனுமதி கோருவது நகைமுரண் ஆகும். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.
எந்திரங்களைக் கொண்டு ஆற்று மணல் அள்ளுவதன் தீமைகளை நான் அறிவேன். கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் நான் நேரடியாக ஆய்வு செய்து 60 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் பதிவு செய்து, அதனடிப்படையில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
கொள்ளிடம் ஆற்றில் கண்மூடித்தனமாக மணல் அள்ளப்பட்டதன் விளைவாகத் தான் நூற்றுக்கணக்கான கிராமங்களில் கடல் நீர் உள்புகுந்துள்ளது. கடலூர் மாவட்டம் அடிக்கடி மழை - வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களில் மணல் கொள்ளை என்பதை மறுக்க முடியாது.
கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக ஆண்டுக்கு இரு முறை செய்தி வெளியாவது வாடிக்கையாகி விட்டது. அதற்கு காரணம் 50 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுவது தான். இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை திறந்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பதன் காரணம் தான் தெரியவில்லை.
கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது. கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
தமிழக அரசும் நினைத்தால் மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம்.
எனவே, தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளை திறப்பது, எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள அனுமதிப்பது போன்ற முடிவுகளை தமிழக அரசு கைவிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மாறாக, புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால், அவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி பாமக சார்பில் மாபெரும் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT