Published : 18 Jul 2022 09:44 AM
Last Updated : 18 Jul 2022 09:44 AM
சின்னசேலம் வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் சிறுமி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், தங்கள் மகளை கொலை செய்துள்ளதாகவும் கூறி பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், மாணவி உயிரிழப்புக்கு முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை, கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தது. கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
வன்முறை நடைபெற்ற இடங்களில் நேற்று மாலை தமிழக உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக டிஜிபி அளித்தப் பேட்டியில், "போராட்டம் என்ற பெயரில் பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள், போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளி, பேருந்துகளுக்கு தீ வைப்பு, போலீஸ் வாகனம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை பார்த்தால், மாணவியின் உறவினர்கள்போல தெரியவில்லை. அனைத்து வீடியோ பதிவுகளையும் வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக அடையாளம் கண்டு கைது செய்வோம்" என்று கூறினார்.
இந்நிலையில், அனைத்து வீடியோ பதிவுகளையும் வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக அடையாளம் கண்டு கைது செய்வோம். அவர்களின் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பள்ளியின் முதல்வர், செயலர் மற்றும் தாளாளர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT