Last Updated : 13 May, 2016 06:51 PM

 

Published : 13 May 2016 06:51 PM
Last Updated : 13 May 2016 06:51 PM

ஆலங்குளத்தில் திமுக, அதிமுக கடும் போட்டி: உள்ளடி வேலைகள்தான் சவால்

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் இருவருக்குமே சவாலாக இருப்பது கட்சிக்குள்ளேயே நடக்கும் உள்ளடி வேலைகள்தான்.

ஆலங்குளம் தாலுகா, அம்பாசமுத்திரம் தாலுகாவின் ஒரு பகுதி, ஆழ்வார்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகள் மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது இத் தொகுதி. பீடித் தொழிலாளர்கள் கணிசமாக வசிக்கும் இத் தொகுதியில் பரவலாக நாடார், தேவர், யாதவர் சமுதாயத்தினர் வசிக்கிறார்கள்.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். காந்தி காமராஜ் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

12 வேட்பாளர்கள்

2006 தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவும், 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரனும் வெற்றி பெற்றிருந்தனர். தற்போது இத் தொகுதியில் மொத்தம் 12 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா, அதிமுக வேட்பாளர் எப்சி கார்த்திகேயன், தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரநாத், பாஜக வேட்பாளர் அன்புராஜ், பாமக வேட்பாளர் குணசேகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வசந்தி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

இருமுனை போட்டி

இவர்களில் இறுதி கட்ட நிலவரப்படி திமுக, அதிமுக இடையே இருமுனைப் போட்டி காணப்படுகிறது. இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இரு கட்சிகளும் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர்கள். ஆனால், அவர்களது கட்சியினரின் உள்ளடி வேலைகள்தான் சவாலாக இருக்கிறது.

திமுக வேட்பாளர்

இத் தொகுதியில் ஏற்கெனவே வெற்றிபெற்று அமைச்சராகவும் பொறுப்புவகித்த பூங்கோதை ஆலடி அருணாவுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திமுக கட்சியின் வாக்குறுதியே அதற்கு காரணம். இத்தொகுதியில் பரவலாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று திமுகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதேநேரத்தில் கடந்தமுறை பூங்கோதை எம்.எல்.ஏ.வாக இருந்த போது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றாதது குறித்த அதிருப்தி அவருக்கு பின்னடைவாக உள்ளது.

அதிமுக வேட்பாளர்

அதிமுக சார்பில் போட்டியிடும் எப்சி கார்த்திகேயன் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக 10 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளார். சிரித்த முகத்துடன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் அவருக்கு இரட்டை இலை சின்னம்தான் பெரும் பலமாக இருக்கிறது. அதேநேரத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தரப்பில் அவருக்கு இன்னும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ராஜேந்திரனும் இதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு தொகுதி பக்கமே வரவில்லை. அவருக்கு கேரளத்தில் தேர்தல் பணி ஒதுக்கியிருப்பதால் அங்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி வளர்ச்சிக்கு ராஜேந்திரன் எவ்வித பணிகளையும் செய்யாது அக்கட்சியின் தற்போதைய வேட்பாளருக்கு பின்னடைவாக இருக்கிறது.

பிற கட்சிகள்

இத் தொகுதியில் தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேமுதிகவு க்கு கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை. காரணம் இத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணிக்கு பலமான கிளைகள் இல்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வசந்திக்கு இத் தொகுதியில் இளைஞர்கள் தரப்பிலிருந்து கணிசமான வாக்கு கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் திமுக, அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x