Published : 13 May 2016 07:36 PM
Last Updated : 13 May 2016 07:36 PM

சைதை இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்: மா.சுப்பிரமணியன் பேட்டி

வேட்பாளருக்கு சில கேள்விகள்

5 ஆண்டுகளில் வேலை இல்லாத இளைஞர்களே இருக்காத தொகுதியாக சைதை உருவாக்கப்படும் என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதி மேம்பாட்டிற்காக அத்தொகுதியின் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

சைதை தொகுதியில் உங்களது பிரச்சாரம் எப்படி இருக்கிறது?

முதல் 15 நாட்கள் சைதாப்பேட்டை நடந்து போய் வீடு வீடாக வாக்கு சேகரித்தேன். இதே போல் 1977ல் புருஷோத்தமன் என்ற வேட்பாளர் இவ்வாறு வாக்கு சேகரித்திருக்கிறார். அதற்கு பிறகு ஆட்டோ, ஜீப், வேன் என்று வந்தது. ஆனால், நான் தொகுதி நிர்வாகிகளோடு வீடு வீடாக நடந்தே போய் தொகுதி முழுக்க வாக்கு சேகரித்தோம். கடந்த 3 நாட்களாக வேனில் போய் 2வது முறையாக வாக்கு சேகரித்து இன்று முடிக்கிறோம். நாளைக்கு 3 வது முறை வாக்கு சேகரிப்புக்கு கட்சி ரீதியாக 17 வார்டு இருக்கிறது. காலையில் 8 மணிக்கு பைக்கில் போய் வாக்கு சேகரிக்க ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடிக்கிறோம். நடந்து வேன், பைக் மூலம் என 3முறை வாக்கு சேகரித்திருக்கிறோம்.

தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

1977ல் ஆரம்பித்து 2011 வரை சட்டமன்றத் தேர்தல், இடையே வந்த நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் இப்படி நிறைய தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். ஆகையால் மக்களுடைய முகபாவம், வரவேற்பு ஆகியவற்றைப் பார்க்கும் போது என்ன நினைக்கிறார்கள், வெற்றி - தோல்வி வாய்ப்பு எப்படியிருக்கும் என்று சொல்ல முடியும். திமுக ஜெயித்ததில் 30000 வாக்குகள் என்பது தான் கூடுதல் வித்தியாசம். அதை விட இப்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

உங்களது பிரச்சார யுக்தி என்ன?

நடந்து போய் வாக்கு சேகரித்தது மக்களுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டது. அதனால் 2 விஷயங்கள் அனுகூலமாக இருந்தது. ஒன்று அவர்களோடு நின்று பேச முடிகிறது. வேட்பாளருக்கும், வாக்காளருக்கும் இடையே ஒரு இணக்கம் ஏற்படுகிறது. அப்போது அந்தப் பகுதி வாக்காளர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கிறார்கள். அவை அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறோம். திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் என்னவெல்லாம் சொன்னார்களோ அதை எல்லாம் நிறைவேற்ற வாய்ப்பு அமையும்.

வெற்றி பெற்றால் சைதாப்பேட்டை தொகுதிக்கு என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறீர்க்கள்?

முத்துரங்கம் ப்ளாக், கட்டபொம்மன் ப்ளாக், ஜோதிராமலிங்கம் நகர், சாரதி நகர், துரைசாமி தோட்டம், வ.உ.சி தெரு, ரத்தினத் தோட்டம், விநாயகபுரம், நாகிரெட்டி தோட்டம், நெருப்புமேடு, யோகி தோட்டம், சாமியார் தோட்டம், திடீர் நகர், கோதாமேடு, சலவையாளர் காலனி, ஆற்றுமா நகர், சின்னமலை குடிசைப் பகுதிகள், சித்ரா நகர், சூர்யா நகர், கோட்டூர் புரம் இவ்வளவு ஏரியாக்கள் மழை காலத்தில் அடையாறு ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் இந்த பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படும். ஒவ்வொரு வருட மழைக்கும் இவர்களை எல்லாம் பள்ளிக்கூடத்தில் அமர்த்தி சாப்பாடு போடுவது அரசின் வேலையாக இருக்கிறது. எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி அகலப்படுத்தி தூர்வாரி இரண்டு பக்கமும் கான்கிரீட் சுவர்கள் அமைத்து வெள்ளம் தடுக்கப்படும்.

சைதாப்பேட்டையில் 100 ஆண்டுகால பழமையான அரசு மருத்துவமனை இருக்கிறது. முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் கூட இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். அந்த மருத்துவமனை மேம்படுத்தி நவீன மயமாக்கப்படும்.

சைதாப்பேட்டையில் இருக்கும் மார்க்கெட்டை நவீன மார்க்கெட்டாக்கி பழம் மார்க்கெட், மீன் மார்க்கெட், கறி மார்க்கெட் என தனித்தனியாக அமைப்பேன். அதற்கான கீழ்தள பார்க்கிங் வசதி செய்து தரப்படும். இங்குள்ள பாதி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இங்கு வேலையில்லாத இளைஞர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்களிடம் பேசி 6 மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் அமைத்து தரப்படும். 5 ஆண்டுகளில் வேலை இல்லாத இளைஞர்களே இருக்காத தொகுதியாக சைதை உருவாக்கப்படும்.

முதியோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கான உதவித்தொகை பெறும் ஆணைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகங்களில் நிறைய முறைகேடுகள் நடக்கிறது. அது இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்குமே அலைச்சலைக் குறைத்து தொகுதிக்குள்ளேயே தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை வரவைத்து முகாம்கள் நடத்தி ஆணைகள் வழங்கப்படும்.

எதிர்க்கட்சியில் பிரச்சாரத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?

எதிர்க்கட்சியினர் மிக மோசமான அரசியலை இந்த தொகுதியில் நடத்தி வருகிறார்கள். நான் வேட்பு மனு தாக்கல் பண்ணும் போது கூட, 2 வக்கீலை அனுப்பி என் மனுவை ஆட்சேபிக்க சொன்னார்கள். காஞ்சிபுரம் ROTARY PUBLIC கையொப்பம் இட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், என் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டார்கள். இதனை செய்தியாக்கி சந்தோஷம் அடைந்தார்கள்.

சைதை தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னைக்கு வெளியே வீடு கொடுத்திருக்கிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்களே..

அனுப்புகிறேன் என்று சொல்லி காலி பண்ணி அனுப்பினார்கள். உண்மையில் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்காமல் அதிமுககாரர்களுக்கு பாதிக்கு மேல் கொடுத்திருக்கிறார்கள். 2600 பேர் அனுப்பி 4600 வீடு கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. இதை முறையாக எடுத்துச் சொல்லி நேர்மையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுகு வீடு கொடுக்கப்படும். தவறு இழைத்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.

அங்கு சென்றவர்களுக்கு அங்கேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவதற்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை அங்கேயே நடத்தி அவர்களுகு வேலை வாங்கி கொடுக்க முயற்சி மேற்கொள்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x