Published : 18 Jul 2022 06:10 AM
Last Updated : 18 Jul 2022 06:10 AM

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது.

அப்போது பள்ளியின் வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு இருந்த பொருட்களை சூறையாடி, பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 18) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவர் கே.ஆர்.நந்தக்குமார் வெளியிட்ட அறிக்கை: சின்னசேலம் தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு படித்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கானோர் அந்த பள்ளி வளாகத்தில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பள்ளிக்கு ரூ.50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசுதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

எனவே, பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நிவாரணம் வழங்குதல், குற்றவாளிகளை தண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்படும். தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமுக முடிவு காண முன்வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.ராஜா வெளியிட்ட அறிக்கையில், ‘பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இன்று இயங்காது’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே உள்ளது.

பேரிடர் காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், தனியார் பள்ளிகள் சங்கங்களின் அறிவிப்பால் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிகளை மீறும் செயலாகும். அவ்வாறு தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்
கள் சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள்’’என்று தெரிவித்தறனர்.

எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. மேலும், விடுமுறை அறிவிப்பை மாணவர்களது பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளி சங்கங்கள் உள்ளன. அதில் முதன்மையான சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டபள்ளிகள் இன்று மூடப்பட வாய்ப்பு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x