Published : 18 Jul 2022 06:07 AM
Last Updated : 18 Jul 2022 06:07 AM

தமிழகத்தை  முதல்  மாநிலமாக்கும் பொறுப்பு அனைவருக்கும்  உள்ளது; நம்மைத் தாக்கி விளம்பரம் தேடுவோரை புறந்தள்ளுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ‘நம்மைத் தாக்கி விளம்பரம் தேடுவோரை புறந்தள்ளி, மக்களுடன் பயணித்து முன்னேறுவோம்’ என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டதை அறிந்த ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பொறுப்பை ஏற்கும் முன்னரே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டதால், இந்த தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்எல்ஏ, மருத்துவர் தீரஜ் என இந்த 4 மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்து நலம் பெற உதவினார்கள். அவர்களுக்கும், மருத்துவக் குழுவினருக்கும் நன்றி.

இன்று டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். இருந்தாலும் ஒரு வாரத்துக்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க கூறியுள்ளனர். முதல்வர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன். குடியரசுத்தலைவர் தேர்தலில் நேரில் சென்று வாக்களித்து திரும்ப வேண்டிய நிலையில் உள்ளேன்.

அதே நாளில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது.பேரறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’ என்று மூன்று முறை சொல்ல, அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க.. வாழ்க..வாழ்க’ என்று முழங்கி, ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வை உணர்த்திய நாள்.

கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு திருநாள் நிகழ்வு நடைபெறுகிறது. இதில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் பங்கேற்று உரை யாற்ற உள்ளேன். மேலும், 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்கின்றனர்.

அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது. முதல்வர் பொறுப்பைப் போல், திமுகவின் தலைவர் பொறுப்பையும் சுமப்பதால் கட்சிப் பணிகளையும் மருத்துவமனையில் இருந்த படியே கவனித்தேன்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக் கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடைய வேண்டுமென்றால் இப்போது உழைப்பதை விடவும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைக்க வேண்டும்.

உயர்ந்த லட்சியத்தை அடையவேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். நம்மைத் தாக்கி, அதன்மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது.

அரசியல் பாதையில் குறுக்கிடும் அவர்களை இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம். வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x