Published : 18 Jul 2022 07:50 AM
Last Updated : 18 Jul 2022 07:50 AM

மகள் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்: உயிரிழந்த மாணவியின் தாய் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்துக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-செல்வி தம்பதியின் மகள் மதி(17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், பள்ளி விடுதியில் மர்மமான முறையில் ஜூலை 13-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம், நேற்று கலவரமாக மாறியது.

இதனிடையே, மதியின் பெற்றோர் ராமலிங்கம், செல்வி ஆகியோர் நேற்று காலை நெஞ்சுவலியால், வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் செல்வி கூறியது: எனது மகள் ஸ்ரீமதி உயிரிழந்து 5 நாட்களாகிறது.

கடந்த 4 நாள்களாக அமைதியான முறையில் நீதிகேட்டும் எந்தவித பதிலும் இல்லை. மாணவர்கள் சங்கம் சார்பில் நீதிகேட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, பள்ளி நிர்வாகம் அடியாட்கள் மூலம் தாக்கியதுடன், பள்ளிக் கட்டிடம் மற்றும் வாகனங்களை எரித்து, கல்வீசி கலவரத்தை ஏற்படுத்தி, தற்போது மாணவர்கள் மீது பழிசுமத்துகின்றனர்.

பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை, இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். கொலையைத் தற்கொலையாக மாற்றியுள்ளனர். திட்டமிட்டு கொலை செய்தவர்களைத் தூக்கிலிட வேண்டும். எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

சிபிஐ விசாரணை வேண்டும்

இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமலிங்கம், செல்வி ஆகியோரை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, உரிய நட
வடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x