Published : 17 Jul 2022 07:03 PM
Last Updated : 17 Jul 2022 07:03 PM
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், " நாளை (ஜூலை 18) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறையளித்து நாங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்குகிறோம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியூர் என்ற பகுதியில், சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி இண்டர்நேஷ்னல் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
விசாரணை நிலுவையில் உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை வந்துள்ளது. நாளை இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில், தமிழக காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கான சமூக விரோதிகள், அந்த பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி, 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அந்த பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள், விடுதியில் இருக்கின்ற சிலிண்டர் உள்பட அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர். பள்ளி ஆய்வகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டிருக்கிறது. மேஜை நாற்காலிகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. பள்ளி வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். அந்த பள்ளி வெறும் செங்கலாக மட்டும் அங்கு நிற்கிறது. 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்ற அந்த பள்ளியில் 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும். தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு எல்லாம் எந்தளவுக்கு பாதுகாப்பு அளித்து சட்டம் இயற்றியிருக்கிறதோ, அதேபோல் தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்காவும், தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிக்க நீதி, நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பில் பொது வேலைநிறுத்தத்தை நாங்கள் மேற்கொள்கிறோம்.
தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி நல்லதொரு முடிவை காண வேண்டும். இல்லாவிட்டால், தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, பள்ளிகளை மூடுவது என்று முடிவெடுத்துள்ளோம். நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT