Published : 17 Jul 2022 06:49 PM
Last Updated : 17 Jul 2022 06:49 PM
மேட்டூர்: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ஓடுவதால் கரையோரங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை முழு கொள்ளலவை எட்டிய நிலையில், நேற்று இரண்டவாது நாளாக 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 1,10,000 கன அடியும், நீர் மின் உற்பத்தி நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி என 1,33,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து, அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 8-ம் தேதி முதல் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.
மேட்டூர் அணைக்கு 1,28,839 கன அடி நீர் வரத்து: ''நேற்று முன்தினம் (16ம் தேதி) மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கன அடி நீர் வரத்து வந்த நிலையில், 42-வது முறையாக அணையின் முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து, நேற்று முன்தினம் மாலை 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி என 1,23,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நேற்று(17ம் தேதி) காலை 8 மணி முதல் வினாடிக்கு 1 லட்சத்து 24 ஆயிரத்து 113 கன அடியாக இருந்த நீர் வரத்து, காலை 9 மணிக்கு 1,28,000 கன அடியாகவும், மாலை 1,28,839 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கனஅடி என மொத்தம் வினாடிக்கு 1,33,0000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து 120.82 அடியாக நீடிக்கிறது. அணையில் நீர் இருப்பு 94.78 டிஎம்சி-யாக உள்ளது.
2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை: அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுத்தால் நடவடிக்கை: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் பகுதிக்கு சென்று யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், யாரும் செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கா கூடாது என ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதுசம்பந்தமாக தொடர்ந்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார் இணைந்து காவிரி கரையாரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடி பிறப்பில் புனித நீராடல்: ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு நேற்று அதிகாலையில் பொதுமக்கள் மேட்டூர் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வந்து புனித நீராடினர். மேட்டூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, நங்கவள்ளி, ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் மேட்டூர் அணை முனியப்பன் கோயிலுக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். கோயில் அருகே உள்ள ஆற்றில் புனித நீராடிய புதுமண தம்பதிகள் திருமண மண மாலைகளை வாழை இலையில் வைத்து ஆற்றில் விட்டனர். குல தெய்வ வழிபாட்டுக்காக காவிரி ஆற்றில் இருந்து பலரும் புனி நீரை கொண்டு சென்றனர்.
460 மெகா வாட் நீர் மின் உற்பத்தி: மேட்டூர் அணையில் முழுக் கொள்ளவான 120 அடியை எட்டிய நிலையில், அணையில் உள்ள நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையின் சுரங்க நீர் மின் நிலையத்தில் 200 மெகா வாட்டும், அணையின் மின் நிலையங்களில் இருந்து 50 மெகாவாட் மற்றும் ஏழு கதவணைகள் மூலம் 120 மெகாவாட் என மொத்தம் 410 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT