Published : 17 Jul 2022 06:05 PM
Last Updated : 17 Jul 2022 06:05 PM
கள்ளக்குறிச்சி: " சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் தாயார் அனுப்பிய தகவல்கள் அனைத்து உண்மை கிடையாது. அது அத்தனையுமே தவறான தகவல்கள். இறந்த மாணவி மற்றும் அவரது தாயாரின் செல்போனை ஆய்வு செய்தால் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ளலாம்" என்று தீக்கிரையாக்கப்பட்ட பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியது: " இறந்த மாணவி விவகாரத்தில், அந்த பெண் என்றைக்கு தற்கொலை செய்து கொண்டதோ, அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை, நாங்கள், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். நானும் சரி, எங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் என காவல்துறை யாரையெல்லாம் விசாரணைக்கு அழைக்கின்றனரோ, அத்தனை பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.
காவல்துறையினரின் விசாரணைக்கு ராத்திரி பகலாக அமர்ந்து பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். மாணவி தற்கொலை செய்து கொண்ட அந்த நாள், முந்தைய மற்றும் பிந்தைய நாளின் சிசிடிவி காட்சிகள் உள்பட அனைத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். நாங்கள் எதையுமே மறைக்கவில்லை.
மாணவியின் தாயார் எங்களை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் நாங்கள் பள்ளியிலேயே இல்லை. அப்போது நாங்கள் போலீஸார் விசாரணையில் இருந்தோம். அந்த நேரத்தில், மாணவியின் தாயாரால் எங்களைப் பார்க்க முடியவில்லை. இதுதான் உண்மை.
இது எல்லாம் தாண்டி, நாங்கள் எங்கேயும் செல்லவில்லை. போலீஸ் காவலில் இருந்தபோது, ஏன் இப்படி வன்முறையை தூண்ட வேண்டும்?, ஏன் இப்படி பொய்யான தகவலை சமூக ஊடகங்களின் மூலமாக பரப்ப வேண்டும்?,அவர்களது ஆதரவாளர்கள் யார் யாரென்று தெரியவில்லை. அவர்கள் மூலம் பள்ளியின் பெயரை தவறாக சித்தரித்துள்ளனர். நாங்கள் கடந்த 1998-ம் ஆண்டு முதல், பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, பல தடைகளைத் தாண்டி, இந்த நிலைக்கு வந்தடைந்தோம்.
இந்த பள்ளியில் படித்த எண்ணற்ற மாணவர்கள், டாக்டர், இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு அரசு பொறுப்புகளில் உள்ளனர். அந்த மாணவர்களுக்கு தெரியும், எந்த மாதிரியான கஷ்டப்பட்டு அவர்களை உருவாக்கினோம் என்று. இந்நிலையில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பி, சம்பந்தமே இல்லாதவர்களை எல்லாம் தூண்டிவிட்டு, இன்று 17.7.2022 காலை 10 மணிக்கு, பள்ளி வாகனங்கள் என்ன செய்தன? மேஜை, நாற்காலிகள் என்ன செய்தன? அவை அனைத்தையும் உடைத்து, எரித்து நாசமாக்கியுள்ளனர்.
மேலும் எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு படிக்கின்றவர்கள், படித்து முடித்தவர்களின் அசல், நகல் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்து நாசமாக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்திருக்கிறீர்கள். இவை அனைத்துக்கும் மாணவியின் தாயார்தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை நாசமாக்கியதுடன், எங்களை நம்பி படித்துவரும் 3500 குழந்தைகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர். எங்களுக்கு நியாயம் கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களே மாணவியின் தாயார் அனுப்பிய தகவல்கள் அனைத்து உண்மை கிடையாது. அது அத்தனையுமே தவறான தகவல்கள்.
மக்கள் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உயிரிழந்த மாணவியின் போனையும், அந்த மாணவியின் தாயார் போனையும் ஆய்வு செய்ய சொல்லுங்கள். மாணவியின் இறப்புக்கான காரணம் இந்த போனை ஆய்வு செய்தாலே தெரிந்துகொள்ளலாம். அதன்மூலம், மாணவியின் இறப்புக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT