Published : 17 Jul 2022 11:36 AM
Last Updated : 17 Jul 2022 11:36 AM

அண்ணாமலை பல்கலை. நியமனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: "அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், விதிகளை மீறி முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட துறைத்தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும்; இந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு ஆணையிட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 6 துறைகளுக்கு தலைவர்களை நியமிப்பதில் பணி மூப்பு புறக்கணிக்கப்பட்டு, அப்பட்டமான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. இத்தகைய விதிமீறல்கள் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கையும், மாணவர்களின் கல்வியையும் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்தும் தவறுகளை திருத்திக் கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 துறைகளில் காலியாக இருந்த துறைத்தலைவர் பதவிகள் அண்மையில் நிரப்பப்பட்டன. அவற்றில் தமிழ், வரலாறு, நூலகம், உயிரி வேதியியல், புவி அறிவியல், எந்திரவியல் பொறியியல் ஆகிய துறைகளுக்கான துறைத் தலைவர் பதவிகள் பணிமூப்பை பின்பற்றி முறையாக நிரப்பப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் வேதியியல், விலங்கியல், பொருளியல், மருந்தியல், உற்பத்தி பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் ஆகிய ஆறு துறைகளின் தலைவர்கள் பதவிக்கு தகுதியானவர்களையும், பணி மூப்பின் அடிப்படையில் முதலிடத்தில் இருப்பவர்களையும் புறக்கணித்து விட்டு தகுதியிலும், பணி மூப்பிலும் குறைந்தவர்களை பல்கலை. நிர்வாகம் நியமித்துள்ளது.

உற்பத்தி பொறியியல் துறைத்தலைவர் பணிக்கு பணிமூப்புப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பவரும், வேதியியல் துறைத் தலைவர் பணிக்கு நான்காவது இடத்தில் இருப்பவரும், விலங்கியல் துறைத் தலைவர் பணிக்கு மூன்றாவது இடத்தில் இருப்பவரும், பொருளியல், மருந்தியல் ஆகிய இரு துறைகளின் தலைவர் பணிக்கு இரண்டாவது இடத்தில் இருப்பவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்திருக்கிறது.

பல்கலைக்கழகங்களின் துறைத் தலைவர் பதவி பணி மூப்பில் முதலிடத்தில் இருப்பவரைக் கொண்டு தான் நியமிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவும் இதையே வலியுறுத்துகிறது. ஆனால், அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர், இந்த விதிமுறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு தமக்கு விருப்பமானவர்களையும், தலையாட்டுபவர்களையும் நியமித்திருக்கிறார். இதை அனுமதிக்க முடியாது.

மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர் நியமனத்தில் இவற்றை விட கொடுமையான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அத்துறையில் பணி மூப்பு அடிப்படையில் இணைப் பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவர் முதலிடத்தில் உள்ளார். விதிகளின்படி அவர் தான் துறைத் தலைவராக நியமிக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர் இணைப் பேராசிரியர் தான் என்பதால், இத்துறையுடன் தொடர்பு இல்லாத வேறு துறையிலிருந்து ஒருவரை அயல் பணியில் அழைத்து துறைத் தலைவராக நியமித்துள்ளனர். மாநில பல்கலைக்கழகங்களில் இணைப் பேராசிரியராகவும், மத்திய பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகவும் இருப்பவர்களை துறைத் தலைவர்களாக நியமிக்கலாம் என்பதே விதியாகும். ஆனால், அந்த விதிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பட்டமாக மீறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவர் என்பது தான் பேராசிரியர்களின் கனவு பதவியாகும். அந்த வாய்ப்பு பல பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களுக்கு கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்த வாய்ப்பை பறித்து பணி மூப்பு இல்லாதவர்களுக்கு கொடுப்பதை விட கொடுமையான சமூக அநீதி இருக்க முடியாது.

இப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தகுதியும், பணி மூப்பும் இருந்தும் கூட துறைத் தலைவர் பணியை அடைய முடியாது என்பது அவர்களுக்கு செய்யப்படும் அநீதி ஆகும். இந்த பிழையை சரி செய்யும்படி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தும் கூட அதை துணை வேந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல், கல்வியியல் புல முதல்வராக, பணி மூப்புப்பட்டியலில் உள்ள முதலிடத்தில் உள்ள செந்தில் வேலன் என்பவரை புறக்கணித்துவிட்டு, நான்காம் இடத்தில் உள்ளவர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல்வர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோரை நியமிப்பதில் பெருமளவில் ஊழல்கள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நியமனங்களுக்கான ஆணைகள் பதிவாளர் பெயரில் தான் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பணி நியமனங்கள் உள்ளிட்ட கடந்த சில வாரங்களில் வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆணைகள் பதிவாளர் பொறுப்பில் உள்ளவரை புறக்கணித்து விட்டு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் பெயரால் வினியோகிக்கப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றும் முனைவர் கதிரேசன், அதே பல்கலைக்கழகத்தில் வேளாண்துறையில் பணியாற்றியவர். அப்போதுள்ள விருப்பு, வெறுப்புகளை இப்போது காட்டுவதாகவும், இது குறித்த ஆசிரியர்களின் எதிர்க்குரலை அவர் மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய துணைவேந்தர் ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதை உயர்கல்வித் துறை அனுமதிக்கக் கூடாது.

விதிகளை மீறி முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட துறைத்தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும்; இந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த சமூக அநீதிகள் களையப்படாவிட்டால், அதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x