Published : 17 Jul 2022 04:55 AM
Last Updated : 17 Jul 2022 04:55 AM
சென்னை: தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடக்கிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (ஜூலை 18) நடக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளரை அதிமுக ஆதரிக்கிறது. அண்மையில் சென்னை வந்த திரவுபதி முர்மு, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
ஓட்டலில் எம்எல்ஏக்கள் கூட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனி சாமி தலைமை வகிக்கிறார்.
அதிமுகவில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறை சீல் வைத்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், தலைமைச் செயலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதனால். கட்சி அலுவலகம், அரசு இல்லம் ஆகிய இரு இடங்களிலும் கூட்டம் நடத்த முடியாத நிலையில், ஓட்டலில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக விவாதிப்பது மட்டுமல்லாது, ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிப்பது, அப்பதவிக்கு யாரை கொண்டுவருவது என்பது குறித்தும் விவாதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுகவும் ஆலோசனை
அதேபோன்று குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டமும் இன்று நடக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிப்பார்.
கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT