Last Updated : 16 Jul, 2022 04:53 PM

 

Published : 16 Jul 2022 04:53 PM
Last Updated : 16 Jul 2022 04:53 PM

புதுச்சேரி |ஆளுநர் தமிழிசைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி பறக்கவிட்ட துத்திப்பட்டு கிராம மக்கள்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆளுநர் வருகையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுச்சேரி அருகே துத்திப்பட்டு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் கட்டியுள்ளதாக ஏற்கெனவே பிரச்சினை எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பிறகு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அவரது உத்தரவு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இது குறித்து தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்துக்கு எடுத்து சென்ற நிலையில், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பிரச்சனை எழுப்பப்படும் துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் 2 நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை வருகைதர இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆளுநரின் வருகையை கண்டிக்கும் விதமாக தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடிகளை கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘‘ஏரி இடங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களால் விவசாய நிலங்களுக்கு கூட செல்ல முடியவில்லை. இது குறித்து புகார் மனு அளிப்பதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்டும், அவர் ஒதுக்கி கொடுக்கவில்லை. ஏரியில் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியவில்லை. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அளிவிப்போம்.’’என்றனர்.

இதையடுத்து தகவல் அறிந்து துத்திப்பட்டு கிரமத்துக்கு வந்த சேதராப்பட்டு போலீஸார் கருப்பு கொடிகள், கருப்பு பலூன்கள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து போலீஸ் ஜீப்பில் எடுத்துச் சென்றனர். இதனிடையே சின்னத்திரையினர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x