Published : 15 Jul 2022 07:39 PM
Last Updated : 15 Jul 2022 07:39 PM
ஓசூர்: “நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெருந்தலைவர் காமராஜர் போட்ட பிச்சையே காரணம்” என்று கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார் கூறினார்.
ஓசூரில் கர்மவீரர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்ட காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் மூன்று மொழி பேசும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
ஓசூர் காமராஜர் காலனி கே.ஏ.பி. மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய அமைப்பு செயலாளரும், அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை தலைவருமான கே.ஏ.மனோகரன் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளருமான தினேஷ்குண்டுராவ் பங்கேற்று பேசும்போது, "அரசியலில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக காமராஜர் திகழ்கிறார். காமராஜர், முதலமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தாலும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் இறக்கும் போது அவரிடம் வெறும் 200 ரூபாய் மட்டுமே வைத்திருந்தார். அந்த அளவுக்கு எளிமையாக வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்னும் உயிருடன் இருக்கிறதென்றால் அதற்கு காமராஜரின் மக்கள் பணியே காரணமாகும். காமராஜரின் சேவை மிகப்பெரியது. சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ்நாடு முதலமைச்சராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவர் கல்விக்கு ஆற்றிய பணி, மதிய உணவு திட்டம் மற்றும் அவர் ஆட்சியில் கட்டிய அணைகள், சிறப்பான ஆட்சி முறை பற்றி மக்கள் பேசுகின்றனர்.
இந்தியா முழுவதும் காமராஜரின் பணியை மக்கள் நினைவு கூறுகின்றனர். அவர் நாட்டுக்காக ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
மக்களவை உறுப்பினர் செல்லகுமார் பேசியது: "நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெருந்தலைவர் காமராஜர் போட்ட பிச்சையே காரணம் என பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். இன்று கூலித் தொழிலாளியின் குழந்தைகளும் உயர்கல்வி படிக்க முடிகிறதென்றால் அதற்கு பெருந்தலைவர் காமராஜரே காரணம்.
அன்றைய காலத்தில் பள்ளிக் கூடங்களுக்கு கட்டிடங்கள் இல்லை. ஆசிரியர்களும் இல்லை. தரையில் அமர்ந்து மண்ணில் அ...ஆ என எழுதி பழக வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் அன்றைய செல்வந்தர்களிடம் பேசி அவர்களின் வீட்டு திண்ணைகளை கேட்டு வாங்கி அதில் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடத்தினார். அதனால் கடைகோடியில் உள்ள ஏழை குழந்தைகளும் கல்வி கற்க முடிந்தது.
தமிழ்நாட்டில் அவர் ஆட்சியில் கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் சோற்றிலே கை வைக்கும் போது கர்மவீரர் காமராஜருக்கு மறக்காமல் நன்றிக்கடன் செலுத்த வேண்டும்" என்று செல்லகுமார் கூறினார்.
தொடர்ந்து அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ள காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தினேஷ்குண்டுராவ் வெளியிட, மக்களவை உறுப்பினர் செல்லகுமார் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகங்களையும் தினேஷ் குண்டுராவ் வழங்கினார்.
முன்னதாக கர்மவீரர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓசூர் காமராஜர் காலனியில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு, ஐஎன்டியூசி தேசிய அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வீரமுனிராஜ், காங்கிரஸ் கட்சி சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் கீர்த்திகணேஷ், ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகி முனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT