Published : 15 Jul 2022 05:09 PM
Last Updated : 15 Jul 2022 05:09 PM

தாலியை கழட்டிவைப்பது கணவருக்கு மன உளைச்சலைத் தரும்: விவகாரத்து வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: தாலியை கழட்டிவைப்பது கணவருக்கு மன உளைச்சலைத் தரும் செயல் என்று விவாகரத்து வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் விஎம் வேலுமணி, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வின் முன் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஈரோடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ள சி.சிவகுமார் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், அவரது விவாகரத்து மனுவை கடந்த 2016-ஆம் ஆண்டு உள்ளூர் குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்யக் கோரி சிவகுமார் உயர் நீதிமன்றத்தை அனுகினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகுமாரின் மனைவியிடம் நடந்த விசாரணையின்போது, அவர் தான் தாலியை கழட்டிவைத்தது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். தாலி செயினை மட்டுமே லாக்கரில் வைத்துள்ளதாகவும், தாலி தன்னிடமே உள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தாலியை கழட்டிவைக்கும் செயலே கவனிக்கத்தக்கது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் "இந்து திருமண சட்டம் 7ஐ சுட்டிக்காட்டி தாலி கட்டுவது அவசியமில்லை. ஆகையால் ஒருவேளை தனது கட்சிக்காரர் அவ்வாறு செய்திருந்தாலும் கூட அது திருமண வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், "ஆனால் நம் நாட்டில் தாலி கட்டுவது திருமண வைபவத்தில் ஒரு முக்கிய சடங்காக இருக்கிறதே" என்று சுட்டிக் காட்டினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் உள்ள ஆவணங்களைப் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட பெண் தாலியை கழட்டி வைத்ததை தெளிவாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துப் பெண் எவருமே கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியை கழட்டி வைக்கமாட்டார். அது ஒரு புனித அடையாளமாக இருக்கிறது. திருமண வாழ்க்கை தொடர்வதையே அது குறிக்கிறது. கணவனின் மரணத்திற்குப் பின்னரே இந்துப் பெண்கள் தாலியை அகற்றுகின்றனர். அதனால் வழக்கை தாக்கல் செய்தவர் கூறியதுபோல் இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

தாலியை அகற்றியது மட்டுமே திருமண பந்தத்தை முறித்துவிடும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், தாலியை அகற்றியது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பது நிரூபணமாகிறது. மேலும், இத்தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே பிரிந்துதான் வாழ்கின்றனர். அதனால் அவர்கள் எவ்வித சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பது தெரிகிறது. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து இத்தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x