Last Updated : 15 Jul, 2022 04:11 PM

2  

Published : 15 Jul 2022 04:11 PM
Last Updated : 15 Jul 2022 04:11 PM

புதுச்சேரியில் சிறுவன் மரணம் எதிரொலி: பள்ளி நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூர் செல்லும் சாலைகளில் பள்ளி நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் நியமிப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரவைத் தலைவர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி - விழுப்புரம் மற்றும் புதுச்சேரி - கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படுகின்ற விபத்துக்களால் தொடர்ந்து ஏராளமானோர் பலியாகியுள்ளனர். நேற்று பள்ளி சென்ற குழந்தை தந்தை கண் முன் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசின் செயல்பாடுகளையும், சாலை பணிகளை விரைவுப்படுத்தாதது, போதிய பாதுகாப்பு பணிகளை போலீஸார் செய்யாதது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்சினையால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக ஆளுநர் தமிழிசை கூறியது: "ரெட்டியார்பாளையம் சாலைவிபத்தில் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. வாகன நெரிசல் சரிசெய்யப்படும். குழந்தைகளை அழைத்து செல்லும்போது எச்சரிக்கை தேவை. மிகுந்த மனவேதனை அடைந்தேன். சாலையை விரிவுப்படுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றுவதல் செய்ய மக்களும் உதவ வேண்டும். புறவழிச்சாலை பணிகள் தொடர்பாக விசாரிக்கிறேன்.

தவறுகள் சரிசெய்யப்படும். உயிரிழப்புகளை அனுமதிக்க முடியாது. குழந்தைக்கு அஞ்சலி. அரசு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்" என்று தமிழிசை கூறினார்.

இதனிடையே, தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸார், பொதுப் பணித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறை அதிகாரிகளுடன் சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவர் செல்வம் அவரது அறையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் காவல்துறை ஏடிஜிபி ஆனந்த மோகன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தன்யா, காவல்துறை கண்காணிப்பாளகர்கள் மாறன், மோகன்குமார், ராஜசேகரன் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், உழவர்கரை நகராட்சி செயற்பொறியாளர் மலைவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: "புதுச்சேரி-கடலூர் சாலை மற்றும் புதுச்சேரி-விழுப்புரம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த இரண்டு சாலைகளில் குறுக்கே சென்டர் மீடியன் கட்டைகள் அமைக்க வேண்டும். பள்ளி நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபட வைக்க வேண்டும். இந்த சாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

மேலும், 100 அடி சாலையில் இருந்து அமைக்கப்பட உள்ள புறவழிச் சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவையான நிதியை மாநில நிதி ஆதாரத்திலிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்" என்று செல்வம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x