Published : 15 Jul 2022 02:38 PM
Last Updated : 15 Jul 2022 02:38 PM
அரியலூர்: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அறிவித்து இருக்கும் போது, பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின், தந்தை நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு திருமாவளவன் இன்று (ஜூலை 15) மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: "நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியலை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார். அப்படியென்றால், ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே உள்ளிட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் விளக்க வேண்டும்.
பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை அறிவிக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் செயலாக உள்ளது. தமிழகத்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுகிறார்.அவரது செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருளுக்கும், சேவைக்கும் வருங்காலங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று திருமாவளவன் கூறினார்.
இந்நிகழ்வின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT