Published : 15 Jul 2022 01:37 PM
Last Updated : 15 Jul 2022 01:37 PM

நீலகிரியில் கனமழை | மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த விரையும் அமைச்சர்கள்: முதல்வர் உத்தரவு

சென்னை: "நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் செந்தில்பாலாஜி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ளேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 14.7.2022 முடிய தமிழ்நாட்டில் 115.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 48 விழுக்காடு கூடுதல் ஆகும்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில், 1.6.2022 முதல் 14.7.2022 வரை 664.9 மி.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்டதிற்கான இயல்பான மழை அளவை விட 125 விழுக்காடு கூடுதல் ஆகும்.

மேலும், கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. கடந்த 10.7.2022 முதல் 14.7.2022 முடிய நீலகிரி மாவட்டத்திற்கான இயல்பான மழை அளவு 38.9 மி.மீ. என்ற நிலையில், 263.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், குடிசைகள்/வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன, ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில், 22 குடும்பங்களைச் சார்ந்த 102 நபர்கள், 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்தவும், வேளாண் / தோட்டக்கலைப் பயிர்களுக்கும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் , மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி , கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், பல்துறை மண்டல குழுக்களும், மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், அமைச்சர்கள் தலைமையிலான அரசு நிருவாகம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும். பொதுமக்கள், அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கவனித்து பாதுகாப்புடன் செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x