Published : 15 Jul 2022 12:44 PM
Last Updated : 15 Jul 2022 12:44 PM
சென்னை: தமிழகத்தில் 18 முதல் 59 வயது வரை உள்ள 3.45 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் 75 நாட்கள் அதாவது, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 18 முதல் 59 வயதுடையவர்கள் 2ம் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் முடிந்தவுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் எனவும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை.
இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்தது. 18 - 59 வயது பிரிவினர் ரூ.386.25 க்கு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாவது டோஸ் செலுத்தி ஆறு மாத காலமாகி 3,60,60,204 பேர் உள்ளனர். இவர்களில் 18,08,669 பேர் பூஸ்டர் செலுத்தியுள்ளனர். 3,45,26,821 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர். இதற்காக தமிழக சுகாதாரத்துறை யிடம் 43,32,770 டோஸ் மருத்துகள் கையிருப்பில் உள்ளது. இதற்கான சிறப்பு தடுப்பூசி மையங்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களிலும், பள்ளி ,கல்லூரிகளிலும் அமைக்க வேண்டும். இதன் செயல்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாரம் ஒருமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT