Published : 15 Jul 2022 06:06 AM
Last Updated : 15 Jul 2022 06:06 AM

அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரிய வழக்கில் சிசிடிவி ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், ஜூலை 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ ஆதாரங்களை இன்று தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 11-ம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் சட்டம் - ஒழுங்குபிரச்சினையை காரணம் காட்டி,அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

இந்த சீலை அகற்றக் கோரி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சொந்தம் கொண்டாடி தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி என்.சதீஷ்குமார் முன்புஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்: அதிமுகபொதுக்குழு கூட்டம் நடந்தபோதுகட்சித் தலைமை அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் நுழையக்கூடும் என்பதால் பாதுகாப்பு கோரிகாவல் துறைக்கு முன்கூட்டியே மனு அளித்தோம். அதன்பிறகும் போதிய பாதுகாப்பு தராததாலேயே வன்முறை வெடித்தது.

ஓ.பன்னீர்செல்வம், கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கணினி, கோப்புகளை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் தற்போது ஒருங்கிணைப்பாளர் கிடையாது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். கலவரத்தை தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தை பொருத்தவரை, கட்சி விதிகளின்படி தலைமை நிலையச்செயலாளர்தான் அதன் பொறுப்பாளர். பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தது ஜனநாயக விரோதம்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில்மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ்: கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வருகிறார்.

அவர் கட்சி அலுவலகத்துக்கு செல்லஎந்த தடையும் இல்லை. எதிர் தரப்பினர் கட்சி அலுவலகத்தை பூட்டிஉள்ளே நுழைவதை தடுத்ததால்தான் பிரச்சினை உருவானது. ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலான பிரச்சினையை வேறு வழிகளில்தான் தீர்க்க முடியும்.

அவர்கள்சிவில் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்த வேண்டும். ஆனால்,கட்சி அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தது இயந்திரத்தனமானது. எனவே, சீலை அகற்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்க வேண்டும்.

காவல் துறை தரப்பில் கூடுதல்குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக்: ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்வதை போலீஸாரால் தடுக்கமுடியவில்லை. இது அதிமுகவுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை அல்ல.

அதிமுகவின் இரு பிரிவினருக்கு இடையே திடீரென ஏற்பட்ட உள்கட்சி மோதல். இருந்தபோதும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைஎடுத்ததால்தான் வேறு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இவ்வாறு வாதம் நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், ‘‘கடந்த ஜூலை 11-ம் தேதிகாலை முதல் மாலை வரை அப்பகுதியில் நடந்த சம்பவங்கள்குறித்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ ஆதாரங்களுடன் போலீஸார் விரிவான அறிக்கையை ஜூலை 15-ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். இன்று மீண்டும் விசாரணை நடக்கிறது.

14 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இதற்கிடையே, அதிமுக அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக கைதான 14 பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதிஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பிலும் 400 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான 14 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x