Published : 14 Jul 2022 06:02 PM
Last Updated : 14 Jul 2022 06:02 PM

“பாலின சமத்துவத்தில் 135-வது இடம்... உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு” - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்.

சென்னை: “பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது” தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022ஆம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதையே இந்த குறியீட்டு அறிக்கை அம்பலப்படுத்துகிறது. தற்போது, இந்தியாவில் பாலின வேறுபாடு 68.1 சதவிகிதமாக இருக்கிறது. உலக பாலின இடைவெளி குறியீடு, பெண்களின் பொருளாதார பங்கேற்பு, வாய்ப்பு, கல்வி பெறுதல், ஆரோக்கியம், உயிர் வாழ்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பாலின சமத்துவத்தை வரையறுக்கிறது.

அதன்படி, ஆரோக்கியத்தில் இந்தியா 146-வது இடத்திலும், பெண்களுக்கான பொருளாதார பங்கெடுப்பு மற்றும் வாய்ப்புகளில் 142-வது இடத்திலும், கல்வி பெறுதலில் 107 ஆவது இடத்திலும் அரசியல் அதிகாரத்தில் 48-வது இடத்திலும் இந்தியா உள்ளது. பெண்களுக்கான அரசியல் அதிகாரம் பெறுவதில் இந்தியா வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

உலக நாடுகளில் 135-வது இடத்தில் இந்தியா இருக்கிற நிலையை அண்டை நாடுகளோடு ஒப்பிட்டால், பாலின சமத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். அண்டை நாடுகளான வங்காள தேசம் 71-வது இடத்திலும், நேபாளம் 96, இலங்கை 110, மாலத்தீவு 117, பூடான் 126 என இந்தியாவை விட பாலின சமத்துவம் அதிகமாக இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் உணர்த்துகிறது. இது பாஜக ஆட்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 ட்ரில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கோடி) உள்ள நிலையில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவிகிதத்தையும், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதத்தையும் கூட எட்ட முடியவில்லை. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசோ, இன்னும் 5 ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி) ஜிடிபி இலக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இலக்கை எட்டுவது கடினம் என்பதே எதார்த்த உண்மை. அதற்கு மாறாக, இந்தியா பொருளாதார பேரழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

2023ஆம் ஆண்டுக்குள் 30 சதவிகித ஜிடிபியை எட்டும் நோக்கில் சீனாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி பெற வேண்டிய பகுதியைக் கண்டறிந்து குறியீடுகளை வரையறுத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதே, பொருளாதார இலக்கை அடைவதற்கான வழி. அதைவிட்டு, போகிற போக்கில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் என்று மோடி அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் மோசடி செயலாகும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாஜக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருக்கிறது. பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று வாய் கிழியப் பேசும் ஆர்எஸ்எஸ் வழி வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விட, பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் தான் இப்போதைக்குக் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் வார்த்தை ஜாலங்கள் மற்றும் வெற்றுப் பேச்சுகளால் அல்ல'' என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x