Published : 14 Jul 2022 02:48 PM
Last Updated : 14 Jul 2022 02:48 PM
சென்னை: "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை புறக்கணிப்பதால் ஏற்படுகிற அவமானம் சட்டமன்றத்திற்கு அல்ல, மக்கள் மன்றத்துக்குத்தான்" என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேரவையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிறைய மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இரண்டாவது முறையாக அனுப்பிவைக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று சேர்ந்துவிட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டதாக பேரவையில் முதல்வர் அறிவித்தார், அதை நம்புகிறோம். ஆனால், அது உரிய இடத்துக்கு சென்று சேர்ந்ததா என்பது தெரியவில்லை. ஒருவேளை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அதுபற்றி பதில் கூறாமல் இருக்கலாம்.
சட்டமன்ற மரபுபடி, சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது குடியரசுத் தலைவருக்கோ, உள்துறைக்கோ, மத்திய அரசுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்காமல் இருப்பது மக்களை புறக்கணிக்கும் செயல். காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை புறக்கணிப்பதால் ஏற்படுகிற அவமானம் சட்டமன்றத்திற்கு அல்ல, மக்கள் மன்றத்துக்குத்தான்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, நீட் விலக்கு மசோதாவின் நிலை தொடர்பான தகவலை அளிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார். இதற்கு கடந்த ஜூலை 11-ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலில், "மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது. அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT