Published : 02 Jun 2014 12:12 PM
Last Updated : 02 Jun 2014 12:12 PM
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 29 பேரை சிங்களப் படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர். அதன்பின் ஞாயிற்றுக்கிழமையும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் இந்த அடாவடிச் செயல் கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிந்ததையடுத்து 45 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை தான் இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். ஒன்றரை மாதங்களாக வருமானமின்றித் தவித்த மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்குச் சென்ற நிலையில், அவர்களை கைது செய்திருப்பது மனித நேயமற்ற செயலாகும்.
அதுவும் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். இத்தகைய செயலை இனியும் அனுமதிக்கக்கூடாது.
வங்கக் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும், தாக்குவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கின்றன. இதுவரை 600க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் தாக்கப் பட்டுள்ளனர். எனினும் அதற்கு காரணமானோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் மீனவர்கள் மீதான சிங்களப்படையினரின் அத்துமீறல் ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நரேந்திரமோடி அரசு பதவி ஏற்பதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஒருபுறம் அறிவித்துவிட்டு, அவர்களில் ஒருவர் கூட இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் மேலும் 33 மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசு இன்னும் திருந்தவில்லை; தொடர்ந்து நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இலங்கை அரசின் இடையூறுகளாலும், அத்துமீறல்களாலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தான் தங்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறார்கள். இலங்கை அரசின் இந்தப் போக்கு தொடர அனுமதிக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
எனவே, கைது செய்யப்பட்ட 33 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT