Published : 13 May 2016 08:37 AM
Last Updated : 13 May 2016 08:37 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - ஒட்டுமொத்த செலவே அரை லட்சம்தான்: வெள்ளியணை ராமநாதனின் தேர்தல் அனுபவங்கள்

கரூர் மாவட்டம் குளித் தலை சட்டப்பேரவைத் தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப் பட்டபோது இத்தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த தேர்தலில் கருணாநிதியின் வெற்றிக்காக பாடுபட்ட வெள்ளியணை ராமநாதன் 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று குளித்தலை தொகுதியின் 2-வது சட்டப்பேரவை உறுப்பினரானார். அப்போது அவருக்கு வயது 26.

கரூர் அருகே உள்ள வெள்ளி யணையைச் சேர்ந்தவர் வி.ராம நாதன். 80 வயதிலும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தனது தேர்தல் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

குளித்தலை தொகுதியின் முதல் தேர்தலில் காங்கிரஸ், திமுக இரு கட்சிகளும் என்னை போட்டியிட வைக்க விரும்பின. ஆனால், அப்போது 21 வயதே ஆனதால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் திமுக சார்பில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெற்றியில் பெரும்பங்கு எனக்கு உண்டு.

அதே ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றேன். 1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 47,245 வாக்குகள் பெற்று தமிழக அளவில் அதிக வாக்குகள் வாங்கிய வேட்பாளரானேன். அதே ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளியணையில் போட்டியிட்டு 2-வது முறை ஊராட்சி மன்றத் தலைவரானேன்.

1967-ம் ஆண்டில் குளித்தலை தொகுதி பிரிக்கப்பட்டு கிருஷ்ணராய புரம் தொகுதி உருவாக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி என்பதால் அதன்பின் அங்கு போட்டியிடவில்லை. 1971-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் கரூர் மக்களவைத் தொகுதியிலும், 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மருங்காபுரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்

அந்த காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது 2 கார்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். 1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் வெள்ளி யணையில் 725 சைக்கிள்களுடன் தொடங்கிய பிரச்சாரம் குளித்தலை யில் முடியும்போது 4,000 சைக்கிள் களானது. அப்போது தொண்டர்கள் ஆர்வமுடன் அவர்களே சைக்கிள்களில் வந்து பிரச்சாரத்தில் இணைந்துகொண்டனர்.

இரவில் எந்த தொண்டர் வீட்டிலாவது சாப்பிட்டுவிட்டு அங்கேயே படுத்து உறங்கி மறுநாள் காலை பிரச்சாரத்தை தொடங்குவோம் அப்போதைய ஒட்டுமொத்த தேர்தல் செலவே அரை லட்சத்தில் முடிந்துவிட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x