Published : 19 Jun 2014 08:37 AM
Last Updated : 19 Jun 2014 08:37 AM
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கண்காணிப்பு குழு அமைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
கடந்த மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக கண்காணிப்பு குழு ஒன்றை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூடி முடிவு எடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஜூன் 3-ம் தேதி தங்களை சந்தித்து அளித்த மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு விரைந்து கண்காணிப்புக் குழு அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். தற்போது கண்காணிப்புக் குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு நீரை நம்பி விவசாயம் செய்யும் ஏராளமான விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். தங்களது இந்த உரிய நடவடிக்கைக்கு நன்றி.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT