Published : 13 Jul 2022 05:22 PM
Last Updated : 13 Jul 2022 05:22 PM
மதுரை: திருச்சியில் 11 வயது சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தந்தைக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மனைவி பிரிந்து சென்றால் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், தாயின் அரவணைப்பை வழங்குபவராகவும் தந்தை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி. மனைவி பிரிந்து சென்ற நிலையில் நான்கு குழந்தைகளுடன் ஜான் கென்னடி வசித்து வந்தார். இந்த நிலையில் தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஜான் கென்னடியை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு திருச்சி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து ஜான்கென்னடி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு: "மனுதாரரின் மனைவி நான்கு குழந்தைகளையும் கணவரிடம் விட்டு விட்டு பிரிந்து சென்றுள்ளார். இப்படியான சூழலில் தந்தை குழந்தைகளை பாதுகாப்பதுடன், குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பையும் வழங்க வேண்டும். ஆனால் 11 வயதான பருவம் அடையாத மகளுக்கு தந்தையே பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
மனுதாரர் சுய ஒழுக்கத்தை மீறி, மிருகம் போல் நடந்துள்ளார். வழக்கில் தப்புவதற்காக தனது மகளுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தவறான பழக்கம் இருந்ததாகவும், அதை கண்டித்ததால் தனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். பருவம் அடையாத 11 வயது சிறுமியுடன் வீட்டின் உரிமையாளர் தவறான தொடர்பு வைத்திருந்தார் என்பதை ஏற்க முடியாது.
மனுதாரரும், அவரது மனைவியும் அவரவர் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் நான்கு குழந்தைகளின் மூத்தவரான சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உடன் பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில் இருந்துள்ளார்.
மனுதாரர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கீழமை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இதில் தலையிட முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT