Published : 13 Jul 2022 03:47 PM
Last Updated : 13 Jul 2022 03:47 PM

பொன்னையன் ஆடியோ விவகாரம் | “அவர் மறுத்ததை நாங்கள் நம்புகிறோம்” - சி.வி.சண்முகம்

புதுடெல்லி: "பொன்னையன் பேசியதாக கூறப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஆடியோ குறித்து ‘இது என்னுடைய குரல் இல்லை’ என்று பொன்னையன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதை நாங்கள் நம்புகிறோம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுகவின் பொதுக்குழு கடந்த 11.7.2022 அன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அந்த தீர்மானத்தின் அடிப்படையில், கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், குறிப்பாக அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைப் பதவிகளை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மேலும், 4 மாதங்களுக்குள் இந்த திருத்தப்பட்ட சட்டதிட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இப்படி தீர்மானிக்கப்பட்ட அனைத்து சட்டதிட்டங்கள் அனைத்தும் அன்றைய தினமே தேர்தல் ஆணையத்துக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. தபால் மூலமாகவும் இங்கே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

கடந்த 11.7.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தங்களை பிரமாணப் பத்திரம் மூலம் 2428 பேர், கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். பொதுக்குழு தீர்மானங்கள், சட்டதிட்ட திருத்தங்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்.

பொன்னையன் பேசியதாக கூறப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஆடியோ குறித்து, ‘இது என்னுடைய குரல் இல்லை’ என்று பொன்னையன் மறுத்திருக்கிறார். அதை நாங்கள் நம்புகிறோம். அப்படியே அவர் பேசியதாக இருந்தாலும், இதில் நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவருடைய வயதை முன்னிட்டு நான் எந்த கருத்தும் சொல்லவில்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் குறித்து பேசியதாக கூறி ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பொன்னையன் பேசும் தொலைபேசி உரையாடல் என்று கூறப்படும் அதில் பொன்னையன், " இந்த கோடீஸ்வரன் கையில் கட்சியா, இல்லை அந்த கோடீஸ்வரன் கையில் கட்சியா என்று போகிறது. தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை பக்கமாகத்தான் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கின்றனர். அவுங்கவுங்க பணத்தை பாதுகாப்பதற்காக டெல்லியை பிடித்துக்கொண்டு ஆடுகிறார்கள்.

தங்கமணி அவரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவரும் ஸ்டாலினிடம் ஓடுகிறார். கே.பி.முனுசாமியும் இப்போது ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். கொள்ளையடிச்சு கோடீஸ்வரனான பணத்தை பாதுகாப்பதற்கு இப்படி ஆடுறாங்க, தொண்டன் தடுமாறுகிறான்.

சி.வி.சண்முகம் தலைமையில் 19 எம்எல்ஏக்கள் வன்னியர்கள், கொங்கு கவுண்டர்கள் 42 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 42 பேரில் எடப்பாடி கையில் 9 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்களை எல்லாம், காசு பணத்தைக் கொடுத்து, காண்ட்ராக்ட் கொடுத்து வேலுமணி, தங்கமணி கையில் வைத்துள்ளனர். அதனால் எடப்பாடிக்கு வேறு வழியே இல்லை. கே.பி.முனுசாமி கூட ஒற்றைத் தலைமைக்கு வருவதற்கான முயற்சிகள் கூட நடந்தது.

இப்படி ஒரு குரூப் சாதி அடிப்படையில் வேலை செய்து கொண்டுள்ளனர். அதனால், கொள்கைகள் எல்லாம் காற்றில் விட்டுவிட்டு தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி ஓடிக் கொண்டிருக்கிறார்" என்று கூறியிருந்தார். இதில் பேசியது தான் இல்லை என்றும், யாரோ தன்னைப் போல மிமிக்ரி செய்துள்ளதாக பொன்னையன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x