Published : 13 Jul 2022 12:05 PM
Last Updated : 13 Jul 2022 12:05 PM
சென்னை: வடசென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதால் அங்கு ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தப் படுத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''வடசென்னைக்கு உட்பட்ட எண்ணூர், திருவொற்றியூர் , தண்டையார் பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில், காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
சென்னையில் அனல் மின் நிலையம், 10 மில்லியன் டன் உற்பத்தி திறன்கொண்ட பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் எண்ணூர், மணலி போன்ற இடங்களில் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, திருவொற்றியூா், மணலி பகுதியில் இயங்கிவரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை ஆகிய ஆலைகளில் இருந்து வாயு கழிவுகள், எண்ணெய்க் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாகவே, அப்பகுதிகளில், காற்று மாசு, நிலத்தடி நீா் மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, எண்ணூர், மணலி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளில் உள்ள காற்றில் நிக்கல், பாஸ்பரஸ், மக்னீசியம், லெட் உள்ளிட்ட ரசாயனம் மற்றும் உலோக கழிவுத் துகள்கள், நுண்துகள்களாக காற்றில் பறக்கும் போது பொதுமக்கள் சுவாசிக்கின்றனர். இதனால், மயக்கம், வாந்தி, தலைவலி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் சந்திக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணமாகும். வைக்கோலை எரிக்கும் விவசாயிகளின் குத்தகை நிலத்தைப் பிடுங்குவது, அபராதம் விதிப்பது என, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, காற்று மாசுபாடு, மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை கணக்கில் கொண்டு, வடசென்னையில் மாசு கட்டுப்பாட்டின் வாரியத்தின் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, அந்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மணலி, திருவொற்றியூா், எண்ணூா் பகுதிகளில் ஏராளமான ரசாயனம் மற்றும் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், இப்பகுதியில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிப்பதோடு, ஆய்வு பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.'' இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT