Published : 13 Jul 2022 11:16 AM
Last Updated : 13 Jul 2022 11:16 AM
சென்னை: நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.
நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை.
நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுநர் மாளிகை தெரிவித்ததாக மே 4-ஆம் தேதி முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தமிழக மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT