Published : 13 Jul 2022 09:05 AM
Last Updated : 13 Jul 2022 09:05 AM

தொடர் மழையால் நீருடன் சேறும் சகதியும் கலப்பு: கெத்தை, குந்தா அணைகளில் மின் உற்பத்தி பாதிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கெத்தை, குந்தா அணைகளில் தண்ணீருடன் சேறும், சகதியும் கலந்திருப்பதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்ததால், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டது. இந்தாண்டு பருவ மழை உரிய முறையில் பெய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மின்வாரியத்தினர் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி, மே மாதத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது.

வேகமாக நிரம்பும் அணைகள்

குறிப்பாக, நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், மின் உற்பத்திக்கு முக்கியமாக பயன்படும் அணைகள் நிரம்பி வருகின்றன.

மேல்பவானி - 175 (210), போர்த்திமந்து - 105 (130), அவலாஞ்சி - 90 (171), எமரால்டு - 80 (184), முக்கூர்த்தி - 16 (18), பைக்காரா - 60 (100), சாண்டிநல்லா - 33.5 (49), கிளன்மார்கன் - 22.5 (33), மாயாறு - 16 (17), பார்சன்ஸ்வேலி - 55 (77), குந்தா - 87.5 (87), கெத்தை - 154 (156), பில்லூர் - 97(100) ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதில், குந்தா, கெத்தை, பில்லூர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, பார்சன்ஸ்வேலி அணைகளில் நீர் இருப்பு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது.

சிக்கல் இருக்காது

இது குறித்து குந்தா மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயாறு, சிங்காரா, பார்சன்ஸ்வேலி, காட்டுக் குப்பை உட்பட 12 மின் நிலையங்கள் மூலமாக, தினமும் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலையில், மின் உற்பத்திக்கு உதவும் அணைகளில் 60 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால், மின் உற்பத்திக்கு சிக்கல் இருக்காது. 12 மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள 32 யூனிட்களும் தயார் நிலையில் உள்ளதால், பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க முடியும்" என்றனர்.

சகதியால் பிரச்சினை

உதகை சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழை மூலமாக, மணலாடா, பிக்குலி பாலம், தங்காடு தோட்டம் நீரோடை வழியாக கெத்தை அணைக்கு தண்ணீர் வருகிறது. அதே சமயம், குந்தா, கெத்தை அணைகளில் சேறும், சகதியும் சேர்ந்திருப்பதால், கடந்த ஒரு மாதமாக தண்ணீர் நிறம் மாறி கலங்கலாக காணப்படுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், ஆய்வு மேற்கொண்ட குந்தா மின்வாரிய அதிகாரிகள் தலைமை அலுவலகத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

மழை அளவு (மி.மீ.)

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தேவாலாவில் 117 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அப்பர்பவானி - 98, கூடலூர் - 82, அவலாஞ்சி - 63, நடுவட்டம் - 63,ஓவேலி - 59, பந்தலூர் - 51, சேரங்கோடு - 38, கிளன்மார்கன் - 23, எமரால்டு - 10.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x