Published : 13 Jul 2022 08:09 AM
Last Updated : 13 Jul 2022 08:09 AM
உடுமலை: தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் இதுவரை இல்லாத வகையில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து தலா 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துசாதனை படைத்துள்ளதாக காற்றாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 35 சதவீதமாக உள்ளது. நாட்டில்மொத்தமுள்ள 25,000 காற்றாலைகளில் தமிழகத்தில் மட்டும் 12,000 காற்றாலைகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு தொடர்ந்து 7-வது நாளாக காற்றாலைகள் மூலம் தினமும் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
கடந்த 9-ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 120.25 மில்லியன் யூனிட் உற்பத்தியானதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். 6 மாதங்களில் அதிகளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். கடந்த சில நாட்களாக இரவில் அதிக வேகத்துடன் காற்று வீசுவதால் காற்றாலைகளின் இயக்கம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரிரங்கையன் கூறியதாவது: தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் காற்றாலைகள் உள்ளன.
ஜூலை 3-ம் தேதி 103.96 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. 4-ம் தேதி 106.91, 5-ம் தேதி 111.13, 6-ம் தேதி 101.71, 8-ம் தேதி 107.76, 9-ம் தேதி 120.25 மில்லியன் யூனிட் என இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. 10-ம் தேதி 100 மில்லியன் யூனிட்அளவை கடந்துள்ளது. ஜூலை 9-ம் தேதி அன்றைய தமிழகத்தின் மின் நுகர்வு அளவான 340.399 மில்லியன் யூனிட்டில், காற்றாலையின் பங்கு35 சதவீதம் ஆகும்.
ஆடி மாதத்தில் இன்னும் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதனால் காற்றாலை மின் உற்பத்தி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய,மாநில அரசுகள் காற்றாலை உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, மரபு சாரா எரிசக்தி துறையின் உடுமலை செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் கூறும்போது, “தமிழகத்தில் 8,518 மெகாவாட் உற்பத்தி திறனுக்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் உடுமலை காரிடருக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 3,894.6 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 4,698 காற்றாலைகள் நிறுவப்பட்டு, அதில் மே மாதம் முதல் சுமார் 4,500 காற்றாலைகள் இயங்குகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT