Published : 13 Jul 2022 08:01 AM
Last Updated : 13 Jul 2022 08:01 AM

பள்ளிகளில் மாணவர்களுக்கு காகிதக் கலையை கற்றுத் தர வடமாநில இளைஞர்களுக்கு அனுமதி: தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்களிடம் வட மாநில இளைஞர்களால் விற்கப்படும் காகிதக் கலை தொடர்பான புத்தகங்கள்.

ஜி.செல்லமுத்து

திருச்சி: தமிழகத்தில் கரோனா காலகட்டத்துக்கு பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் கல்வியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்விஇணைச் செயல்பாடுகள் என்ற பாடவேளை சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பாடவேளைகளில் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், விநாடி வினா மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகள் போன்ற கலைச் செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், நுண்கலை பாடவேளையில் இடம்பெற்றுள்ள காகித கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், இதைக்கற்றுக் கொடுக்க வட மாநில இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ் கலை இலக்கியப் பேரவையின் திருச்சிமாவட்டச் செயலாளர் மு.த.கவித்துவன் கூறியது: வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் பள்ளிகளுக்கு வந்து, காகிதக் கலையை கற்றுத் தருவதாக கூறுகின்றனர்.

அவர்கள் மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொண்டுவரும் காகிதக் கலை புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேர்த்தியான சிறப்பாசிரியர்கள் இருக்கும்போது, இதற்கு வடமாநிலத்தவரை அனுமதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காகிதக் கலை பயிற்சியை சிறப்பாசிரியர்கள் கொண்டு வழங்க முடியாது. அதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களை கொண்டுதான் வழங்கப்பட வேண்டும்.

வழக்கமாக யோகா, காகிதக் கலை உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையில் தற்போது காகிதக் கலை பயிற்சிஅளிக்க டெல்லியை சேர்ந்த நிபுணர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை.

குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கைவினை கலைஞர்கள் யாரேனும் தன்னார்வ அடிப்படையில் பயிற்சி அளிக்க முன் வந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x