Published : 13 May 2016 02:18 PM
Last Updated : 13 May 2016 02:18 PM
கம்பம் தொகுதியில் திமுக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில், கம்பம் தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் நீதிக்கட்சி ஒரு முறை, திமுக நான்கு முறை, அதிமுக மூன்று முறை, காங்கிரஸ், த.மா.கா. தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.டி.கே.ஜக்கை யன் போட்டியிடுகிறார். இவரது சொந்த ஊர் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி. இருப்பினும் இவர் கடந்த 17ஆண்டுகளுக்கு முன்பே மதுரைக்கு குடியேறி விட்டார்.
திமுக சார்பில் என்.ராமகிரு ஷ்ணன் போட்டியிடுகிறார். இவரது சொந்த ஊர் கம்பம். இவர் கடந்த 1989-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சுப்பராயரிடம் தோல்வி அடைந்தார்.
வைகோ திமுகவில் இருந்து விலகியபோது ராமகிருஷ்ணனும் திமுகவில் இருந்து விலகினார். இவர் 2001-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது 6-வது முறையாக மீண்டும் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
கம்பம் தொகுதியில் தேவாரம்-கேரளத்தை இணைக்கும் சாக்குலூத்து மெட்டுச்சாலை, கோம்பை-ராமக்கல்மெட்டு ஆகிய திட்டங்கள் நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் தேவாரம், கோம்பை, பல்லவராயன்பட்டி, சிண்டலச்சேரி, கம்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளும், கேரளத்துக்கு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 1996, 2001-ம் ஆண்டுகளில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.ஆர்.ராஜேந்திரன் மீண்டும் இந்த முறை த.மா.கா. சார்பில் போட்டியிடுகிறார். மேலும் பாஜக, பாமக, நாம் தமிழர், எஸ்டிபிஐ எனக் கடும் போட்டி நிலவுகிறது.
இச்சூழ்நிலையில், கடந்த இரண்டு தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்ற திமுக இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் அசோகர் பசுமை இயக்கத் தலைவர் ஏ.திருப்பதிவாசகன், 18-ம் கால்வாய் திட்ட விவசாய சங்கத் தலைவர் பி.ராமராஜ் ஆகியோர் கூறியதாவது:
சாக்குலூத்து மெட்டு திட்ட சாலை அமைக்க கடந்த 1981-ம் ஆண்டு அதிமுகவின் அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் குழந்தைவேலு அடிக்கல் நாட்டினார். 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த சாலை அமைக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை.
மேலும் ராமக்கல் மெட்டுச் சாலை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திராட்சை கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் திராட்சை விவசாயிகளும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர்.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது கூறியதாவது:
கம்பம் அரசு மருத்துவ மனையில் ரூ.90 லட்சம் மதிப்பில் கூடுதல் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.1.25 கோடி மதிப்பில் கம்பம் நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் ரூ.5.17 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பில் திராட்சை குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இதேபோல் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாக்குலூத்து மெட்டு, ராமக்கல் மெட்டு சாலைகள் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனத் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT