Published : 09 May 2016 12:58 PM
Last Updated : 09 May 2016 12:58 PM

குமரி கூட்டத்தில் தனி நபர் விமர்சனத்தைத் தவிர்த்தார் மோடி

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் உள்ள தொகுதி கன்னியாகுமரி. கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளை வாரிச் சுருட்டிய அதிமுகவை கன்னியாகுமரியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளி, திமுகவை டெபாசிட் இழக்க வைத்து, பாஜக வெற்றிபெற்றது.

இதில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் கிள்ளியூர் நீங்கலாக மற்ற 5 தொகுதிகளில் பாஜகவே முன்னிலை வகித்தது. இந்த வெற்றியை மையமாக வைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் குமரி மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பாஜக சார்பில் அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் பிரச்சாரம்

அதன் ஒரு கட்டமாக நேற்று கன்னியாகுமரியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பாஜக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அதிமுக, திமுக கட்சித் தலைமைகளின் மீது நேரடி தாக்குதல் நடத்தவில்லை. தனி நபர் தாக்குதலில் ஈடுபடாமல், மறைமுக விமர்சனத்தில் அவர் ஈடுபட்டார். மத்திய அரசின் மூலம் தமிழக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி வழங்குகிறோம். ஆனால், அதற்கான பையில் நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதில்லை என்று அதிமுகவையும், 2ஜி ஊழல் செய்தவர்களும் இந்த தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் என திமுகவையும் பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

இது குறித்து கூட்டத்துக்கு வந்திருந்த பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மாற்று அரசியலின் பாதை இதுதான். எங்களுடைய சாதனைகளே வெற்றி தேடித்தரும். மாற்றுக் கட்சிகளை விமர்சிப்பது எங்களின் நோக்கம் அல்ல என்றனர்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டிய காரணங்கள் என சிலவற்றை பட்டியலிட்டு, கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அதற்காக பிரதமருக்கு எழுந்து நின்று ஒரு நிமிடம் நன்றி சொல்லுங்கள் என்று சொன்னார்.

உடனே அனைவரும் எழுந்து நின்றனர். சிலர் திராவிடக் கட்சிகளின் பாணியில் கூப்பிய கரத்துடன் நின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x