Published : 12 Jul 2022 05:42 PM
Last Updated : 12 Jul 2022 05:42 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில், நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை - தெற்கு டி.எல்.எப். ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைபடி, முதல்வர் ஸ்டாலின் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், எம்.பி. எம்எல்ஏ.க்கள், அரசுத் துறைச் செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அறிகுறிகள் இருப்பவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும், யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே முதல் தவணை, இரண்டாவது மற்றும் பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “இன்று சற்று உடல் சோர்வு இருந்தது. பரிசோதித்ததில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசி போட்டுக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
நலம் பெற வாழ்த்து
இதற்கிடையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட தகவல் வருத்தம் அளிக்கிறது. எல்லாம் வல்ல கந்தனின் ஆசியால், அவர் பூரண குணமடைந்து, மக்கள் சேவைக்குத் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT