Published : 12 Jul 2022 04:11 PM
Last Updated : 12 Jul 2022 04:11 PM
தஞ்சாவூர்: சசிகலா அணியில் அவரது சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளருமான திவாகரன் இணைந்தார். சசிகலா முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத திவாகரன், “சசிகலாவின் கரத்தை வலுப்படுத்த இணைந்துள்ளோம்” என்றார்.
அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளருமான திவாகரன் இன்று சசிகலா அணியில் இணைந்தார். அவருடன் நிர்வாகிகளும் இணைந்தனர். அப்போது சசிகலாவுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக விழா மேடையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்வில் திவாகரன் பேசும்போது, “அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்வை அனைவரும் கவனித்து வருகின்றனர். எம்ஜிஆர் ஜெயலலிதா மீது யாரெல்லாம் அன்பு, பாசம் வைத்துள்ளனரோ அவர்கள் அனைவரும் சசிகலா மீதும் அன்பு வைத்துள்ளனர். சசிகலா ஒரு தன்னலமற்ற தலைவி. ஒவ்வொரு முறையும் அதிமுக சரிந்து விழாமல் தாங்கி பிடித்தவர். தற்போது அவர் கஷ்டபடுவதை பார்த்து கொள்ள முடியாது. எதற்கும் ஆசைப்பட மாட்டார். பிறர் தேவையை கேட்டறிந்து செய்து கொடுப்பார்” என்றார்.
அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே திவாகரன் நா தழுதழுக்க, கண்ணீர் விட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து அவரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து திவாகரன் பேசுகையில், "அதிமுக தான் தனது குடும்பம் என்று வாழ்பவர். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க நினைத்தார். ஆனால் சசிகலாவோ அதனை அன்புடன் மறுத்தார்.
அப்படிப்பட்டவரின் விசுவாசத்தை தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் பலர் மறந்து விட்டனர். அவரால் பதவிகளை பிடித்தவர் ஏராளம். எங்கள் வீட்டு கதவை திறந்தவர்களுக்கு கூட பதவி கிடைத்துள்ளது. அவர்கள் எல்லாம் நன்றியை மறந்து விட்டார்கள். இதனால் சசிகலாவின் கரத்தை வலுப்படுத்த அண்ணா திராவிடர் கழகத்தை அவருடன் இணைத்துள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT