Last Updated : 12 Jul, 2022 03:22 PM

 

Published : 12 Jul 2022 03:22 PM
Last Updated : 12 Jul 2022 03:22 PM

அதிமுகவுக்குள் நடக்கும் அடிதடிக்கு இதர கட்சி மீது குற்றம்சாட்டுவது சரியானதல்ல: மார்க்சிஸ்ட்

புதுச்சேரி: “மத்திய அரசின் திட்டங்களை அதிமுக விமர்சிக்காமல், கட்சித் தலைமைக்கு வரவும், அதிகாரத்தை கைப்பற்றவே சண்டை போடுகின்றனர், அவர்களுக்குள் நடக்கும் சண்டையில் மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவது சரியானதல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமகிருஷ்ணன் கூறியது: "மத்திய அரசு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியுள்ளது. பாஜக இல்லாத மாநிலங்களிலும் ஆளாத மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி என்ற முறையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கரோனா காலத்துக்கு பிறகு சுகாதாரத் துறையை சரியாக கவனிக்காமல் காரைக்காலில் சுகாதார எமர்ஜென்சி நிலை தற்போது அறிவிக்கப்பட்டது. காலராவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனாவுக்கு பிறகு கூட பொது சுகாதாரத்தை பலப்படுத்த பாதுகாப்பு பணிகளை பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்யவில்லை. திறமையற்ற அரசு இது என நிரூபணமாகியுள்ளது. மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், பேருந்து வசதி செய்யவில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கவில்லை. இதை கண்டித்து வரும் 14ம் தேதி கல்வித்துறை முன்பு மறியல் நடத்தப்படும்.

ரேஷனில் அரிசி நிறுத்தப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படும் என கூறினர். இப்போது பணமும் தரவில்லை, ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பாஜக கூட்டணி ஆளும் புதுவையில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. ரேஷனில் அரிசி தராதது உட்பட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து ஆகஸ்ட் 20ம் தேதி தலைமை செயலகம் முன்பு மறியல் நடத்தப்படும்.

ஆட்சியில் அதிகாரத்தில் அடித்த கொள்ளையையும், அதை பாதுகாப்பதையும், அதில் தலைமைக்கு வரவே அதிமுகவில் பிரச்சினை இருக்கிறது. இது உட்கட்சி பிரச்சினை. மத்திய அரசின் பல திட்டங்களை அதிமுக விமர்சிக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றவே சண்டை போடுகின்றனர்.

அதிமுகவுக்குள் உள்ள அடிதடிக்கு, மற்றொருவர் மீதோ, இதர கட்சி மீதோ குற்றம்சாட்டுவது சரியானதல்ல.

புதுச்சேரி சிபிஎம் பிரதேச குழுவானது தற்போது மாநிலக் குழுவாகியுள்ளது. நேரடியாக மத்தியக் குழு கீழ் இனி செயல்படும்" என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமசந்திரன், தமிழ்ச் செல்வன், பிரபு ராஜ், சத்யா உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x