Published : 12 Jul 2022 05:06 AM
Last Updated : 12 Jul 2022 05:06 AM

அதிமுக கிளை செயலாளர் டு பொதுச்செயலாளர்: பழனிசாமியின் அரசியல் பயணம் - ஒரு டைம்லைன் பார்வை

1954-ம் ஆண்டு பிறந்த பழனிசாமி, அரசியல் ஆர்வம் மற்றும் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் 1974-ல் அதிமுகவில் தனது 20-வது வயதில் இணைந்தார். அதிமுகவில் ஒரு அடிப்படை தொண்டன்கூட தலைமைப் பொறுப்புக்கு வரமுடியும் என்பதை முதல்வராகி நிரூபித்த பழனிசாமி, தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் வசமாக்கியுள்ளார்.

1974 -ல் அதிமுகவில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளைச் செயலாளரானார். அதன்பின் ஒன்றியம், மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டார்.

1989 - எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜானகி, ஜெயலலிதா அணி என இரு அணிகள் உருவான நிலையில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணியின் சார்பில் சேவல் சின்னத்தில், சேலத்தில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.

1991-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும், சேலம் வடக்கு மாவட்ட இணைச்செயலாளராகி, தொடர்ந்து சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனார்.

1996 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 1998 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் வென்று எம்.பி.யானார்.

1999 மற்றும் 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தார்.

2003-ல் தமிழ்நாடு சிமென்ட் கழக பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

2006-ல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரானார்.

2011-ல் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார்.

2016–ல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளின் அமைச்சரானார்.

2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப்பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகள் உருவான நிலையில், பிப்.16-ல் தமிழகத்தின் முதல்வரானார்.

2017 – ஆகஸ்ட்டில் இரு அணிகளும் இணைந்தநிலையில், பொதுக்குழுவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வானார்.

2021 - சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தார். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் அவர் தலைமையில் 65 உறுப்பினர்களை பெற்று பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார்.

2022 ஜூலை 11-ல் (நேற்று) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராகியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x