Published : 12 Jul 2022 04:35 AM
Last Updated : 12 Jul 2022 04:35 AM
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்க ஜூலை 17-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்க உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது.
அரசு கொறடா அறிவிப்பு
இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் சமீபத்தில் சென்னை வந்து, கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரினர்.
ஜூலை 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அறிவுறுத்தல் வழங்கப்படும்
இந்தக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது, எப்படி வாக்களிப்பது என்பன குறித்த அறிவுறுத்தல்களை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் வழங்குவார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT