Published : 11 Jul 2022 07:13 PM
Last Updated : 11 Jul 2022 07:13 PM
விழுப்புரம்: புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை ஐஸ்வர்யா நகரில் உள்ள முருகன் கோயிலில் சர்ச்சைக்குரிய நித்யானந்தாவிற்கு 18 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடர் எனக் கருதப்படும் பாலசுப்பிரமணியம் என்பவர், மலேசிய முருகன் கோயில் போன்று ஐஸ்வர்யா நகரில் கோயில் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டது.
அதையொட்டி இன்று கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது கோயிலுக்கு வந்தவர்களுக்கு ஆச்சர்யம் கலந்த வியப்புடன் பார்த்தபோது, கோயிலில் உள்ளே நுழையும் பகுதியில் 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவத்தில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
அந்தச் சிலையைப் பார்த்ததும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பரபரப்புக்கு ஆளாயினர். இதுகுறித்து கோயில் குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது, இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர் என்றும், பின்னர் ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால், சிலை நித்யானந்தா போல் தோற்றமளிப்பதாக மழுப்பியுள்ளனர்.
பின்னர் கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்யானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது. ஏற்கெனவே நித்யானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. பக்தர்களும் அந்த சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT