Published : 11 Jul 2022 01:27 PM
Last Updated : 11 Jul 2022 01:27 PM

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு; 145 தடை உத்தரவு அமல்

சென்னை: சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் சென்றார். ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலரும் காயமடைந்தனர். ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழக அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் உள்ளே வர வழி செய்தனர். பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய ஓபிஎஸ், ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை வணங்கிவிட்டு உள்ளே செல்ல அதிமுக கொடியுடன் காத்திருந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தை சுற்றிவைக்கப்பட்டிருந்த ஈபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்தனர். தலைமைக் கழகத்தின் அனைத்து கதவுகளையும் அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக, கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடைக்கப்பட்ட கதவுகளை சரிசெய்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும், அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாக கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இதனிடையே, “திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றம்சாட்டினார். | விரிவாக வாசிக்க > “திமுகவின் கைக்கூலியாக ஓபிஎஸ் செயல்படுகிறார்” - அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் சரமாரி தாக்கு

இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்... ஓபிஎஸ் நீக்கம்...

முன்னதாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதேவேளையில், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. | விரிவாக வாசிக்க > அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுக பொதுக்குழு நேரலை இங்கே...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x